சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

21 ஆண்டுகாலமாக முடங்கிய நெய்யாறு இடதுகரை கால்வாய் – விவசாயிகள் பரிதவிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக நீர் வரத்து இன்றி காணப்படும் நெய்யாறு இடதுகரை கால்வாய்

குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான நீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் 1963ல் காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது தான் நெய்யாறு இடதுகரை கால்வாய் திட்டம். அப்போதைய கேரள முதல்வர் சங்கர் தலைமையிலான அரசால் 84.75 அடி உயரமுள்ள நெய்யாறு அணை உருவாக்கப்பட்டது. தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அணைமுகம், கருப்பையாறு மூலம் குறிப்பிட்ட அணைக்கு 40% நீர் செல்வதால் தமிழக மற்றும் கேரள அரசுகள் நீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்தது.

இதையொட்டி கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை தாலுகா மக்கள் பயன்பெறும் வகையில் நெய்யார் வலது கரை கால்வாயும், குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மக்கள் பயன்பெறும் வகையில் நெய்யார் இடதுகரை கால்வாயும் அமைக்கப்பட்டு நீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் விளவங்கோடு தாலுகா பகுதியைச் சேர்ந்த 2350 சதுர மைல் பரப்பிலான விவசாய விளைநிலங்கள் பயன்பெற்றதுடன் நிலத்தடி நீர்மட்டமும் சிறப்பாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 2003 ல் கேரளாவில் ஏ.கே.அந்தோணி தலைமையில் நடைபெற்ற ஆட்சியின் போது எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் குறிப்பிட்ட நீர் பங்கீட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சப்ஜெக்ட்-3 என்ற அறிக்கை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து நெய்யார் இடதுகரை கால்வாயில் 2004ல் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் விளவங்கோடு தாலுகா பகுதியில் நீர்வரத்து தடைபட்ட நிலையில் விவசாயம் முற்றிலுமாய் பாதிக்கப்பட்டு உள்ளதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து உள்ளதால் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றதும் நெய்யார் இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி தவறாது இடம்பெறும்.

ஆனால்..ஆண்டுகள் 21 உருண்டு ஓடியதே ஒழிய இக்கால்வாயில் நீர் உருண்டு ஓடவில்லை. பெருந்தலைவரால் திறந்து வைக்கப்பட்ட இக்கால்வாய் பயன்பாடின்றி பாழடைந்து பொலிவினை இழந்து புதர் மண்டி குப்பை கிடங்காக மாறி வருகிறது. பல பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நீர் தேவையினை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட கால்வாயினை மீட்டு பராமரிப்பதோடு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்திட தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நெய்யார் இடது கரை கால்வாயில் நீரை திறந்துவிட உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *