சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கோரிக்கை

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் எனவும் தமிழ் சார்லிசாப்ளின் எனவும் அழைக்கப்படும் பெருமைக்கு உரியவர்.என்.எஸ்.கிருஷ்ணன்.(நாகர்கோவில். சுடலைமுத்து. கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்) நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் 29.11.1908 அன்று சுடலைமுத்து-இசக்கி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்.ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரால் 4ம் வகுப்பிற்கு பின் தொடர இயலவில்லை. சிறுவயதில் நாடக கொட்டகையில் சோடா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டவர் பின்னர் வில்லுபாட்டு கலைஞராகவும், நாடக நடிகராகவும் உருவானார். மதுரை ஸ்ரீபாலசுப்ரமணிய சபாவில் சேர்ந்து சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி நகைச்சுவை பாத்திரங்களில் புகழ்பெற்றார். பின்னர் சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கினார்.

1930 களில் தேசபக்தி நாடகத்தின் மூலம் மது ஒழிப்பு பிரச்சாரம் செய்தார். கிந்தனார் கதாகாலட்சேபம், தெருக்கூத்து, வில்லுபாட்டு போன்ற பாரம்பரிய கலைகளை புதுமைப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்தார். 1936ல் சதிலீலாவதி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் 150 படங்களுக்கு மேல் நடித்தார். நகைச்சுவை உணர்வை வெறும் உடல்மொழியாக மட்டும் வைக்காமல் சமூக சீர்திருத்த கருத்துக்களை வைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தவர். நகைச்சுவையின் தரத்தை உயர்த்தியவர். இவரது முதல் மனைவி நாகம்மை (மகன் கோலப்பன்) 2வது மனைவி நடிகை டி.ஏ.மதுரம் (பிறந்த பெண் குழந்தை 3 மாதத்தில் இறந்து போனது) 3வது மனைவி வேம்பு (இவருக்கு நான்கு மகன்கள், இரு மகள்கள்) ஆகும்.

எம்.ஜி.ஆர் ஒருமுறை கூறும்போது என்னை மனிதாபிமானி என யாராவது அழைத்தால் அதற்கு முதல் காரணம் கலைவாணர் என புகழ்ந்தார். அந்த அளவில் கொடைத்தன்மை கொண்டவர். ஏழைகளுக்கு உதவி, நாடக குழுக்களுக்கு உதவி என இவர் செய்த உதவிகள் ஏராளம். நாகர்கோவில் நகர பூங்காவில் இவர் தனது சொந்த செலவில் காந்தி நினைவு தூண் கட்டி அவரது கருத்துக்களை பதித்தார்.

1944ல் இதழ் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு 30 மாதங்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் இவரது சொத்துக்கள் பெருமளவு கரைந்தன. பம்மல் சம்மந்த முதலியார் இவருக்கு கலைவாணர் பட்டம் வழங்கினார்.

மது அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் அழற்சி காரணமாக கடந்த 30.8.1957ல் தனது 48 வயதில் அவர் மரணத்தை சந்தித்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சென்னையில் கலைவாணர் அரங்கம் இவரது பெயரை இன்றும் சொல்கிறது. நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் முன்னாள் முதல்வர்.எம்.ஜி.ஆர் திறந்துவைத்த கலைவாணர் சிலை இன்னும் புன்னகை பூத்தபடி நிற்கிறது. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் இவர் தனது மனைவி பெயரில் மதுர பவனம் என்னும் இல்லத்தை 1941ல் கட்டினார். இது குமரி மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் கான்கிரீட் வீடுகளில் ஒன்றாகும்.

காண்போரை வசீகரிக்கும் வகையில் மொசைக் தரையுடன் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்த கட்டிடம் தற்போது பொலிவிழந்து, சிதலமடைந்து, பராமரிப்பின்றி, பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. கலைவாணரின் குடும்ப வாரிசுகள் இதன் ஒரு பகுதியில் வசித்து வரும் நிலையில் ஏனைய இடங்களை வாடகைக்கு விட்டு உள்ளனர். நாடக நடிகர், நகைச்சுவை நடிகர், கொடைவள்ளல், திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்ட ஒரு மாபெரும் கலைஞனின் இல்லம் உருக்குலைந்து சேதம் அடைந்து வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது. எனவே குறிப்பிட்ட இல்லத்தை கலைவாணரின் பெருமையினை வெளிப்படுத்திடும் வகையில் பாதுகாத்து நினைவு இல்லமாக மாற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுவே அவரது கலைச்சேவைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறாகும்.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லம் நினைவு இல்லமாக மாறுமா?
நாகர்கோவிலில் கலைவாணர் வீடு சிதிலமடைந்த நிலையில்
கலைவாணரின் வரலாற்று இல்லத்தை பாதுகாக்க கோரிக்கை
என்.எஸ்.கிருஷ்ணன் இல்லம் அரசு பாதுகாப்பு பெறுமா?
கலைவாணர் நினைவு இல்லம் அமைக்க சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
தமிழ் சினிமா வரலாற்றை காக்க கலைவாணர் இல்லம் பாதுகாக்கப்பட வேண்டும்
நாகர்கோவிலின் பாரம்பரிய அடையாளமாக கலைவாணர் இல்லம்
சிதிலமடையும் கலைவாணர் இல்லம்: நடவடிக்கை எப்போது?
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்தை நினைவகமாக மாற்ற வேண்டிய அவசியம்
கலைவாணரின் கலைச்சேவைக்கு நினைவு இல்லமே சிறந்த மரியாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *