சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

காற்று மாசால் நஞ்சாகும் மூச்சுக்காற்று தடுக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் அதன் உடல்நல பாதிப்புகள்

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (Environmental performance Index – EPI) யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெளியிடும் உலகளாவிய சுற்றுச்சூழல் தரவரிசை ஆகும். சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் உயிர் சூழல், காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு இது அளவிடப்படுகிறது. இதன்படி 177 நாடுகள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்திற்கு முந்தைய 176வது இடத்தை இந்தியா பிடித்து உள்ளது. மேலும் தெற்காசியாவின் பின்லாந்து, பூடான், ஸ்ரீலங்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

காற்று தரம், குடிநீர் மற்றும் சுகாதாரம், கன உலோகங்கள், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு, மீத்தேன் போன்ற வாயுக்களின் உமிழ்வு போக்கு உள்ளிட்ட 17 அம்சங்களை கணக்கிட்டதில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. IQ Air இன் World Air Quality Report 2025 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியா உலகின் 6வது அதிக மாசுபட்ட நாடாக தெரிவிக்கிறது. உலகின் அதிக மாசுபட்ட நகரமாக லோனி (உத்தர பிரதேசம்) உலகின் அதிக மாசுபட்ட தலைநகரமாக டெல்லி விளங்கி வருவதாக தெரிவித்து உள்ளது. இந்தியாவின் 238 பிரதான நகரங்களில் 204 நகரங்கள் காற்று மாசுபாட்டில் வரம்பை மீறி உள்ளன.

பெருகிய டீசல் வாகனங்கள், பழைய வாகனங்கள், தொழிற்சாலை கழிவுகள், நிலக்கரி மின்நிலையங்கள், கட்டுமானம் மற்றும் சாலை தூசி, விவசாயக் கழிவு எரிப்பு, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு, வீட்டு உபயோகப்பொருட்கள் எரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு என்பது வெறும் மூச்சுத்திணறல் என கடந்து செல்ல முடியவில்லை. இதன் மூலம் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் பிற புற்றுநோய்கள், நிமோனியா உள்ளிட்ட சுவாச தொற்றுக்கள், மூச்சுக்குழாய் அழற்சி, மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இஸ்கிமிக் எனும் இதயநோய், நீரிழிவு நோய், நரம்பியல் மற்றும் மூளை செயல்திறன் பாதிப்பு, சிறுநீரக செயல் இழப்பு, இனப்பெருக்க பிரச்னைகள், ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளுக்கு காரணமாகின்றது.

காற்றில் கலக்கும் மிகச்சிறிய துகள்கள் (PM 2.5) நைட்ரஜன் டை ஆக்சைடு, PM10, சல்பர் டை ஆக்சைடு, தரைமட்ட ஓசோன், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவை நுரையிரலுக்குள் புகுந்து ரத்த ஓட்டத்தில் கலப்பதால் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன. 2023ல் காற்று மாசுபாட்டால் சுமார் 20 லட்சம் இறப்புகள் ஏற்பட்டதாக State of Global Air. 2025 அறிக்கை தெரிவிக்கிறது. இது 2000 ம் ஆண்டில் இருந்து 43% அதிகரித்து உள்ளது. 2022ல் மனிதனால் உருவாக்கப்பட்ட PM 2.5 மாசுபாட்டால் 17.2 லட்சம் பேர் உயிர் இழந்து உள்ளனர். டெல்லியில் மட்டும் 2023ல் நிகழ்ந்த இறப்புகளில் 15% (சுமார் 17,200) காற்று மாசுபாட்டால் ஏற்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் காற்று மாசு, பல்லுயிர் இழப்பு, நீர்வளங்கள் பாதிப்பு காரணமாக நாம் சுற்றுசூழல் அபாயத்தில் உள்ளதை ஆய்வுகளும், தாக்கங்களும் நமக்கு தெளிவுபடுத்தி வருகின்றன. இத்தகைய பிரச்னையால் இந்தியர்களின் ஆயுட்காலம் என்பது குறைந்து வரும் நிலையில் பல்வேறு பாதிப்புகளையும் எதிர்நோக்கி வருகின்றோம். எனவே புதுப்பிக்கதக்க எரிசக்தி, வனபாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, நீர்நிலைகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு, இயற்கைக்கு பாதிப்பற்ற நிலைத்த நீடித்த வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே நாம் சுவாசிக்கும் காற்று விஷமாவதை தவிர்க்க இயலும். தற்போது நமக்கான சவக்குழியினை நாமே வெட்டி கொண்டு இருக்கின்றோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..

காற்று மாசுபாடு அதிகரிப்பு: இந்தியாவின் மூச்சுக்காற்று ஆபத்தில்
காற்று மாசால் நஞ்சாகும் இந்தியா – நடவடிக்கை எப்போது?
PM2.5 மாசுபாடு: பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
இந்தியாவின் காற்று தரம் ஏன் தொடர்ந்து மோசமடைகிறது?
காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – தீர்வு என்ன?
மூச்சுக்காற்றை காப்பது அரசின் முன்னுரிமையா?
சுற்றுச்சூழல் நெருக்கடி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்
காற்று மாசால் குறையும் ஆயுட்காலம் – புதிய எச்சரிக்கை
இந்தியாவில் காற்று மாசுபாடு: உடனடி நடவடிக்கை தேவை
காற்று மாசுபாடு மற்றும் பொதுச் சுகாதாரம் குறித்து சமூக பொதுநல இயக்கம் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *