சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

விசாரணை கைதியாக சிறையில் தவிப்போர் விடுதலை எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

இந்திய சிறைகளில் பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக இருக்கும் கைதிகள் குறித்து விளக்கும் படம்

அரசியல் மற்றும் கருத்துவேறுபாடு சார்ந்த குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக சிறையில் பல ஆண்டுகலாக பலர் தவித்து வருகின்றனர். குறிப்பாக UAPA (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் அதிகம் நிகழ்கிறது. தேசிய குற்ற ஆவணக்காப்பக தரவுகளின் படி இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில்

சுமார் 73 – 76% பேர் விசாரணை கைதிகள் அதாவது குற்றம் நிரூபிக்கப் படாதவர்கள். 2022 ல் சுமார் 4.34 லட்சம் விசாரணை கைதிகள் இருந்தனர். தற்போதும் இதே நிலைதான் நீடிக்கிறது. நீதிமன்றங்கள் குற்றத்தை நிரூபிக்கும் முன் தடுப்புக்காவல் நீண்டகால தண்டனையாகிப் போகிறது.

உச்சநீதிமன்றம் பலமுறை நீண்டகால விசாரணைக்காவல் அரசியலமைப்பு சட்டம் 21 ஐ(வாழ்வுரிமை) மீறுவதாக குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் நீதிமன்றத் தாமதம், ஜாமீன் கிடைப்பதில் சிரமம், வறுமை காரணமாக ஜாமீன் செலுத்த முடியாமை உள்ளிட்ட பல காரணங்களால் பலர் சிறைக்குள் தங்கள் வாழ்வை இழக்கின்றனர். பீமா கோரேகான்/எல்கார் பரிஷத் வழக்கு தொடர்பாக 2018ல் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் UAPA ன் கீழ் கைது செய்யப்பட்டனர். 84 வயதில் ஸ்டேன் சுவாமி சிறைக்காவலிலேயே இறந்து போனார்.

உமர் காலித் & ஷர்ஜீல் இமாம் 2020ல் டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் 6 ஆண்டுகள் ஆனபின்பும் இதுவரை விசாரணை தொடங்கவில்லை. GN. சாய்பாபா சுமார் 10 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் குற்றமற்றவர் என விடுதலை செய்தது. PFI தடைக்குப் பின் கைதான தலைவர்கள், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு காவலில் உள்ள தலைவர்கள் என பட்டியல் நீள்கிறது. தமிழ்நாட்டில் UAPA மற்றும் LTTE தொடர்பான வழக்குகளில் விசாரணை கைதிகளாக பலர் விடியலை தேடி வாடி உள்ளனர்.

2025-26 நிலவரப்படி நாடு முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி, உயர்நீதிமன்றங்களில் 64 லட்சம் உச்சநீதிமன்றத்தில் 90,000 வழக்குகள் முடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் போக்சோ (குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்) வழக்கில் ஜூன் 2026 வரை 18,733 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு நீதிபதி சராசரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை கையாளவேண்டிய நிலை உள்ளது. இதனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு சுமார் 22 நீதிபதிகள் மட்டுமே உள்ள நிலையில் Law Commission பரிந்துரைகள் படி நீதிபதிகள், ஊழியர்கள் நியமனம் விரைவுபடுத்தப்டவேண்டும். கோர்ட் மேலாளர், நிர்வாக ஊழியர்கள், தொழில்முறை நிர்வாகிகள் நியமிப்பதின் மூலம் நீதிபதிகள் நிர்வாக பணியில் இருந்து விடுபட இயலும். டிஜிட்டல் மயமாக்கல் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கை அமல்படுத்தபட்டால் வழக்கு தேக்கம் குறையும். விசாரணை கைதிகளின் துயரம் தொலையும்.

நீதிமன்றங்கள் விரைவான விசாரணை மேற்கொள்வது அவசியம் என Section 436 A CrPc/BNSS ன் கீழ் விதிகள் வலியுறுத்தி வந்தபோதும் நடைமுறை அமலாக்கத்தில் பின்பற்றப்படுவது இல்லை.நீதி என்பது வெறும் தீர்ப்பு மட்டுமல்ல. அது விரைவான உறுதியான மற்றும் பயனுள்ள செயல்முறையாக இருக்க வேண்டும். நிரபராதிகள் பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளால் இருப்பதால் அவர்களின் வாழ்க்கை/ வேலை, குடும்பம், புகழ் அனைத்தும் இழக்கும் நிலையே உள்ளது. மனஉளைச்சல், பொருளாதார இழப்பு, சமூக அவமானத்தை இவர்கள் எதிர்கொள்கின்றனர். மக்கள் நீதிமன்றங்களை நம்பவில்லை என்றால் சமூக ஒழுங்கு சீர்குலையும். நீதி என்பது நேரம், இடம், சூழல் அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தாமதம் நீதியின் சாரத்தையே அழித்து விடும். நீதியின் தாமதம் அநீதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *