சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான ஏரி மழைநீர் வரத்தால் நிரம்பும் நன்னீர் ஏரியாகும். இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயத்திற்கும், நிலத்தடி ஆதாரத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ரூ318.9 கோடி செலவில் சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளிக்கிணறு பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதியாக சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கும் திட்டம் 8.7.2026 அன்று தொடங்கப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு 50 லட்சம் கழிவுநீர் சுத்திகரித்து சின்னவேடம்பட்டி ஏரியில் விட மாநகராட்சி திட்டமிட்டது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் இத்திட்டத்தினை கைவிட்டு சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரியின் பாசன கால்வாயில் விடப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது. இந்நீர் சூலூர் ஏரி வரை சென்று சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, சின்னியம்பாளையம், நீலாம்பூர் போன்ற பகுதிகளின் விவசாய பாசனத்திற்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் சுத்திகரிக்கப்பட்ட நீரிலும் நைட்ரஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட எஞ்சிய ஊட்டசத்துக்கள், உப்புக்கள், நுண் மாசுக்கள் கலந்து சின்னவேடம்பட்டி ஏரியின் 20கி.மீ சுற்றளவில் நிலத்தடி நீரை பாதிக்கும் அபாயம் உள்ளது. சுத்திகரிக்கபட்ட கழிவுநீர் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் ஊட்டசத்து அதிகரிப்பால் பாசி உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்களின் ஆதிக்கம், ஆக்சிஜன் குறைபாடு ஏற்படலாம். இது நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளை பாதிக்கும். இதனால் நன்னீர் ஏரியை கழிவுநீர் தொடர்பு உடையதாக மாற்றக்கூடாது.
இத்திட்டத்தின் வடிகாலாக பயன்படுத்த திட்டமிடப்பட்ட சூலூர் பெரிய மற்றும் சிறிய குளங்கள் முறையே 100 மற்றும் 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பகுதியின் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் மற்றும் 15கி.மீ சுற்றளவு பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக திகழும் இக்குளங்களுக்கு நொய்யல் ஆற்றில் இருந்து ராவத்தூர் தடுப்பணை – ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. குறிப்பிட்ட குளங்கள் தூர்வாரப்படாமல் சேறு நிரம்பி உள்ளதுடன் நொய்யல் ஆற்று கழிவுநீரும் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
இச்சூழலில் சின்னவேடம்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் கீழ் எஞ்சிய நீரையும் இக்குளங்களுக்கு திருப்பிவிடப்படுவதால் மேலும் மாசு ஏற்படுவதோடு சுற்றுசூழல் பாதிக்கும் ஆபத்தே உள்ளது. ஏற்கனவே மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்ட பெரியகுளம், வளன்குளம் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் தோல்வியை சந்தித்து உள்ளது. இது போல் இப்பகுதியிலும் திட்டம் முடக்கப்பட்டால் நீர்நிலைகள் பாதிப்பு ஏற்படுவதின் மூலம் அதனால் தீங்கும் அதிகரிக்கும் நிலையினையே இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். எனவே நீர்நிலைகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை மறுபரிசீலனை செய்வதோடு சின்ன வேடம்பட்டி ஏரிக்கு பவானி ஆற்றின் உபரி நீரை கொண்டுவர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply