சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பக்கிள் துரை என்னும் அதிகாரியால் தூத்துக்குடி .கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரி நீரை திரேஸ் புரம் அருகே கடலில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டநீர்நிலை கால்வாய் அவரது பெயரிலேயே பக்கிள் ஓடை என அழைக்கப்படுகிறது. சுமார் 6கி.மீ நீளம் கொண்ட இக்கால்வாய் தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்த நிலையில் மழைநீர் வடிகாலாக மாறி நகரை வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாத்து வருகிறது. நகரின் கழிவுநீர் இதில் சங்கமிப்பதால் தூத்துக்குடியின் கூவமாக மாறி சுகாதார சீர்கேட்டின் சின்னமாகிப் போனது.

இக்கால்வாயில் தேங்கும் கழிவுகள் மழைக்காலங்களில் அகற்றப்படுவதும் மீண்டும் கழிவுகள் குவிவதும் தொடர்கதையாகவே உள்ளது. கால்வாயில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் நீரின் ஓட்டம் தடைபடுவதுடன் ஊருக்குள் வெள்ளம் புகும் ஆபத்து உள்ளது. மேலும் ஆங்காங்கே கொட்டப்படும் கழிவுகளால் குறிப்பிட்ட கால்வாய் குப்பைத்தொட்டியாகிப் போனதோடு இதன் மூலம் துர்நாற்றம் எழுவதுடன் பல்வேறு தொற்றுநோய்களின் பிறப்பிடமாகவும் இது திகழ்கிறது.

தூத்துக்குடி மாநகரின் மொத்த கழிவுகளும் பக்கிள் ஓடையில் விடப்படுவதால் இவை கழிவுநீர் கால்வாயாக உருமாற்றம் கொண்டு திரேஸ்புரம் பகுதியில் கடலில் சங்கமித்து மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கலக்கிறது. இதனால் மீன்வளம் மட்டுமில்லாமல் பவளப்பாறைகள் மற்றும் கடல்வளமும் அழியும் சூழல் நிலவுகிறது.

கடந்த பிப்ரவரி 21ந்தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறிப்பிட்ட நீர்வழித்தடத்தின் சீரமைப்பு பணிகளுக்கென அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். குறிப்பிட்ட கால்வாயில் கழிவுகளை அகற்றுவதோடு விட்டுவிட்டால் மீண்டும் இப்பிரச்னை சிந்துபாத் கதைபோலவே தொடரும். இக்கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுப்பதோடு தொடர்ச்சியாக பராமரிப்பும், கண்காணிப்பும் மேற்கொள்வதின் மூலமே பக்கிள் ஓடை சீர் கெடாமல் இருக்கும்.

பக்கிள் ஓடை தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி, நிலத்தடி நீர் பாதுகாப்பு, வெள்ள தடுப்பு, சுற்றுசூழல் ஆகியவற்றுடன் நெருக்கமானது. அத்தோடு கடல் சூழலிலும், கடற்கரை பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதாலும் இதை ஒட்டிய தீவுகள் கழிவு கலப்பு உள்ளிட்ட காரணங்களால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதால் குறிப்பிட்ட நீர்வழித் தடத்தை பாழாக்காமல் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. இதனை உயிர்ப்பிக்க வைப்பதில் அரசு மட்டுமல்ல அனைவரின் பங்கும் இருக்கிறது.

தூத்துக்குடி செய்திகள்
தூத்துக்குடி சுற்றுச்சூழல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *