சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.இ.எல் ஆலைக்கு என அணுக்கனிம சுரங்கப் பணிகளை விரிவுபடுத்திடும் நோக்கத்தில் மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் நிலங்களை கையகப்படுத்தி மத்திய அரசு குறிப்பிட்ட திட்டத்தினை செயல்படுத்திட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து கருத்து கேட்பு கூட்டமும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுபோன்ற பணிகளுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்தது.
இத்தகைய அணுக்கனிம சுரங்கம் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் அணுக்கனிமங்கள் வெட்டி எடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் ஏற்கனவே குமரி மாவட்ட மக்கள் அணு கதிரியக்கத்தால் பல்வேறு நோய்களுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகி தவித்து வரும் நிலையில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் குமரி மாவட்ட கடலோர கிராமங்கள் வாழ தகுதியற்ற பகுதிகளாக மாறும் அவலமே உள்ளது. இதுமட்டுமில்லாமல் இதற்கென அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் பட்டா நிலங்களும் இத்திட்டத்தால் பறிபோவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிப்பு அடையும் நிலையே உள்ளது.
ஏற்கனவே குமரி மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசால் திட்டமிடப்பட்ட ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களால் இப்பகுதி கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதால் அதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில் அணுக்கனிம சுரங்கப் பணிகளுக்கான நிலஒதுக்கீட்டு அனுமதியினை 11.06.21 அன்று ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த அனுமதியின் கால அவகாசம் 10.06.2026 அன்று முடிவடைகிறது. இத்திட்டத்திற்கு த.வெ.க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட நாளில் காலக்கெடு முடிந்த பின் திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர்.
ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிடும் வகையில் தமிழக அரசு அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதியினை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டு விட்டு உள்ளது. இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி, கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி ஆகியவற்றை பெறுவதற்கான வாய்ப்புகளையும், திட்டத்தினை செயல்படுத்துவதற்கான தடைகளையும் தமிழக அரசு நீக்கி உள்ளது. இத்தகைய அரசின் நடவடிக்கையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் இத்திட்டத்தால் தென்தமிழக மக்கள் மிகுந்த பாதிப்பு அடையும் – சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இயற்கை வளங்களை கொடுங்கரங்களால் கபளீகரம் செய்யப்படுவதால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ள நிலையில் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டத்திற்கு தமிழக அரசு உடந்தையாக இருப்பதின் மூலம் மக்களை பலிகடா ஆக்கி உள்ளது. எனவே மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் நாசகார இ இத்திட்டத்திற்கு அளித்த அனுமதியினை உடனடியாக அரசு ரத்து செய்தாக வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply