சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
காற்றாலைகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்… இவை செயல்பாட்டின் போது காற்று, நீர் மாசுபாடு, கார்பன் உமிழ்வு இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. கடந்த 1985 ல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) நிறுவியது. இதன்மூலம் 1986ல் ஆரல்வாய்மொழியில் காற்றாலை திட்டத்தினை தொடங்கியது. 1990களில் தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு காற்றாலைத் திட்டத்தில் காலடி எடுத்து வைத்தது. இதனால் நிலக்கடலை விளைந்த விளைநிலங்களில் காற்றாலைகள் காற்றுடன் கைகொடுத்தன.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆரல்வாய்மொழி பகுதியில் காணப்படும் இடைவெளி காற்றை ஒரு புனல் போல குவித்து வேகப்படுத்துகிறது. இதனால் இங்கு இயற்கையாகவே அதிக வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் உலகிலேயே அதிக காற்று வீசும் பகுதியில் கலிபோர்னியாவினை அடுத்து முப்பந்தல் பகுதி திகழ்கிறது. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் அரபிக்கடலில் இருந்து வரும் காற்று ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக வீசுகிறது.இத்தகைய புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தனியார் நிறுவனங்களின் முதலீடு காரணமாக இப்பகுதி உலகின் 3வது பெரிய நிலக்கரை காற்றாலை பண்ணையாக திகழ்கிறது. இப்பகுதியில் உள்ள 3000 காற்றாலைகள் மூலமாக 1500 MW மின்சாரம் உற்பத்தியாகிறது.
தற்போது பழைய டர்பைன்கள் உயர்திறன் கொண்டவைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், மதுரை, தேனி, கயத்தார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் குஜராத்திற்கு அடுத்த இடத்தினை தமிழகம் பிடித்து உள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத திட்டமாக இருப்பினும் காற்றாலைகளின் மூன்று வெள்ளை இறக்கைகள் சுழலும்போது மங்கலான பிம்பம் ஏற்படுகிறது. இதனால் பறவைகள் இதனை தெளிவாக பார்க்க முடியாததால் இக்காற்றாலைகளின் இறகுகளில் மோதி இவை இறந்து போகின்றன.
இத்தகைய சூழலில் வலசை வரும் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலையில் ராஜஸ்தான் உள்ளிபட பகுதிகளில் பறவைகள் இறப்பு அதிகமாக நிகழ்ந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. இத்தகைய பாதிப்புகளை தடுக்க உலக அளவில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். அல்ட்ராசோனிக் மூலம் ஒலி அலைகளை வெளியிட்டு பறவைகளை எச்சரிப்பது,UV Lights மூலம் இரவு நேரத்தில் அடையாளப்படுத்துவது, பறவை அருகில் வருவதை கண்டறிந்து Rotor வேகத்தை சிறிது மாற்றி மோதலை தவிர்ப்பது, டர்பைனை தற்காலிகமாக நிறுத்துவது, இறக்கைகள் இல்லாமல் காற்றாலைகள் செயல்படுத்துவது, ரேடார், கேமரா, Al தொழில்நுட்பத்துடன் பாதிப்பை தவிர்ப்பது என கட்டுப்பாட்டு பொறியியலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நெதர்லாந்து, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, UK, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இதற்கான சோதனை முயற்சிகளில் இறங்கி உள்ளன. காற்றாலை இறக்கைகளில் ஒன்றில் மட்டும் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசுவதால் பறவைகள் மோதலை தவிர்க்கலாம் என நார்வே கடந்த 11 ஆண்டுகள் பரிசோதனைக்குப் பின் தெரிவித்து உள்ளது. இத்தகைய தொழில்நுட்ப முறையினால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படாமல் பறவைகள் பாதுகாப்பினை உறுதிபடுத்தி உள்ளது. இத்தகைய முறையினை தமிழ்நாட்டிலும் காற்றாலைகளில் பயன்படுத்தி பறவைகள் இறப்பை தவிர்க்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply