சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கிட தமிழக அரசு முடிவு எடுத்து உள்ளது. முதற்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் அட்டை அதன் பின் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 26.6.26 அன்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்தார். குறிப்பிட்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டையில் மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களுடன் சாதியும் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் ஆண்டுதோறும் ஜாதி சான்றிதழ் பெறும் சிரமத்தை தவிர்க்க இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விபரம் இடம்பெற்றால் மாணவர்கள் சாதி ரீதியாக அடையாளம் கண்டு குழுவாக பிரிந்து செயல்படும் அபாயம் உள்ளதால் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக இது அமையும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் இதனால் தாழ்வு உணர்வு/ புறக்கணிப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பள்ளி என்பது சாதி, மத வேறுபாடுகளை களைந்து சமத்துவமாக கல்வி கற்கும் இடம். சாதியினை அடையாள அட்டையில் இணைப்பது குழந்தைகளின் மனதில் சாதி உணர்வை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.
கடந்த 2019 ல் தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை ஸ்மார்ட் அடையாள அட்டையினை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களிடம் அமல்படுத்தியது. இந்த அட்டையில் க்யூஆர் கோடு இருந்த நிலையில் இதன் விபரங்களை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். இதில் சாதி உள்ளிட்ட விபரங்கள் இருந்தது. இது தனியுரிமை மீறல் மற்றும் சாதி பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து இத்திட்டத்தினை அரசு கைவிட்டது. தற்போதும் இதுபோலவே பள்ளி மாணவர்களிடம் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட திட்டத்தினை செயல்படுத்திட அரசு முயன்று வருவது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
மத்திய அரசு ஒரே தேசம் ஒற்றை மாணவர் அடையாளம் என்னும் நோக்கத்தில் APAAR என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவர்களுக்கும் 12 இலக்கத்துடன் கூடிய தனித்துவ அடையாள அட்டை வழங்க முடிவு எடுத்து உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையின் நீட்சி தமிழக அரசின் இத்திட்டமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. சாதிய சமூகத்தினை உருவாக்கிடும் இத்தகைய திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு/ உதவித்தொகை, நலத்திட்டங்கள் வழங்கிட சாதி குறித்த தரவுகள் தேவைப்படலாம். அதனை குழந்தைகளின் அடையாள அட்டையில் வெளிப்படையாக இணைப்பது சரியான தீர்வு அல்ல. மாணவர்களின் தனிப்பட்ட டிஜிட்டல் தளமான EMIS (Educational Management Information System) ல்இதனை பதிவு செய்வதே போதுமானது. சமூக நீதியினை வலியுறுத்தும் அரசு பள்ளி மாணவர்களிடம் வேற்றுமையினை விதைப்பதும், சாதி உணர்வை உருவாக்கும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடும் நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply