சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
வேள்பாரி நாவலில் பாரி காலத்தில் கடற்படைக்கு திசைகாட்டியாக பயன்படுத்தப்பட்டதாக தெய்வ வாக்கு விலங்கு என தேவாங்கை குறிப்பிடுவார் சு.வெங்கடேசன். எந்த திசையில் வைத்தாலும் இறுதியில் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளும் பழக்கம் இதற்கு உண்டு என்பதால் பழைய காலங்களில் கடல்பயணம் மற்றும் வழிநடைகளில் திசைகாட்டியாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இரவு காலங்களில் பூச்சிகளை வேட்டையாடும் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட மெல்லிய குரங்கினம். அதன் பெரிய கண்கள் மூலம் இது தனித்துவமானது. காடுகளின் சமநிலையினை பராமரிப்பதால் இதனை காடுகளின் காவலன் என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், கரூர், மதுரை, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் உலர் காடுகள், மலை அடிவாரங்கள், தென்னை, புளி தோட்டங்களில் இவை வாழ்கின்றன. துரதிர்ஷ்டவசமாக மருத்துவ, மாந்திரீக நம்பிக்கைகள் காரணமாக இது வேட்டையாடப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளது. சாம்பல் நிற தேவாங்கு அரிய இனமாக கருதி இதனை IUCN செம்பட்டியலில் அருகிய இனமாகவும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் Schedule.1 ல் உள்ளது.கடந்த 2024 டிசம்பர் முதல் 2025 மார்ச் வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆய்வில் 80% தேவாங்கு இனங்கள் அழிந்து வருவது கண்டறியபட்டது.1.7.2026 அன்று மதுரை மாவட்டம் க.புதூர் அருகே அருவி மலை சாலையில் சாம்பல் தேவாங்கு இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
சட்டவிரோத சுரங்கங்கள், காடு அழிப்பு, பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லிகள், சட்டவிரோத வேட்டை,, இரவு நேர போக்குவரத்து, விளைநிலங்களில் அமைக்கப்படும் மின்வேலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரியவகை சாம்பல் நிற தேவாங்கு இனங்கள் அழிந்து வருகிறது. இந்த அரிய அழகான உயிரினம் அழிந்தால் காடுகளின் சமநிலை பாதிக்கப்படும். தமிழ்நாட்டின் உயிரிய பன்முகத்தன்மைக்கு அடையாளமாக திகழும் தேவாங்கு இனத்தினை காக்கும் நோக்கத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் 2022 அக்டோபர் மாதம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை உள்ளடக்கி 118.06 சதுர கி.மீ பரப்பளவில் கடவூர் சரணாலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தேவாங்கின் வாழ்விடமான வெப்பமண்டல காடுகள் பாதுகாக்கப்படுவதுடன், பல்லுயிர் வாழ்வும் மேம்படும்.
இந்தியா உலகின் முக்கியமான பல்லுயிர் பெருக்க நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் வாழ்விட அழிப்பு, சுரங்கங்கள், வேட்டையாடுதல், காலநிலை மாற்றம், மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 132 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அழிவுப்பட்டியலில் உள்ளன. இதனால் உணவு சங்கிலி பாதிக்கப்படுவதோடு பல்லுயிர் சமநிலையும், சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிப்பு அடையும் நிலையினை எதிர்நோக்கி உள்ளோம். இந்த உலகு மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதனை மறந்ததின் விளைவாக இயற்கை மீதான ஆதிக்கம் பல்வேறு உயிரின அழிவுகளுக்கு காரணமாகிறது.
இதன் நீட்சியாகவே தமிழ்நாட்டிலும் தனித்துவம் மிக்க பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகிறது. இவ்வகையில் அழிவின் பிடியில் உள்ள சாம்பல் தேவாங்கு இனங்களை காக்க கடவூர் சரணாலயத்தை ஒட்டி உள்ள பகுதியில் செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களை உடனடியாக நிறுத்திட வேண்டும். அழகர்மலை, அருவி மலை உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். தேவாங்கு வாழ்விடங்களில் இரவு நேர வாகன தடை/ வேக கட்டுப்பாட்டு பலகைகள் அமைப்பது, விழிப்புணர்வு பணிகள், சுற்றுசூழல் சுற்றுலா முன்னெடுப்பு, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதின் மூலம் இயற்கையின் அபூர்வ படைப்பான தேவாங்கினை அழிவில் இருந்து காக்கலாம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply