சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் 21.6.26 அன்று அம்மோனியா வாயு கசிவால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 பேர் உயிர் இழந்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர்கள், மேலாளர், தொழிலாளர் முகவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து உள்ளனர். இறந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தமிழக அரசு ரூ 2 லட்சம் வழங்கி உள்ளது. இறந்தவர்கள் உடலை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் செலவினை அரசு ஏற்று உள்ளது. ஆலைப்பகுதியில் அம்மோனியா வாயு அகற்றும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
ஆலையில் பிரஷர் வால்வில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் மூச்சுத்தினறல் ஏற்பட்டு இறந்ததாக ஆட்சியர். கவிதா தெரிவித்து உள்ளார். நடைபெற்றது விபத்து என கடந்து செல்ல முடியவில்லை. அசாம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15 ஆயிரம் சம்பளத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தங்குவதற்கு உரிய இருப்பிடம் வழங்காமல் ஆலையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கூறியபடி குறிப்பிட்ட சம்பளம் வழங்காமல் 12 மணிநேரம் இவர்களை வேலை வாங்கி உள்ளனர்.
ஏற்கனவே குறிப்பிட்ட ஆலையில் கசிவு தொடர்பாக தொழிலாளர்கள் முறையிட்டும் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்குடன் இருந்ததின் விளைவாக இவ்விபத்து நடந்து உள்ளது. எனவே இது விபத்தல்ல அலட்சியத்தால், விதிமீறல்களால் நடந்த படுகொலையாகவே கருத வேண்டி உள்ளது. இறந்ததில் 15 வயது சிறுமியும் உள்ளதால் சட்டவிரோதமாக குழந்தை தொழிலாளரை வேலைக்கு இங்கு அமர்த்தி உள்ளதும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் இங்கு ஆபத்து கால அலாரம் அமைப்போ, ஃபயர் ஹைட்ரண்ட் வசதிகளோ இல்லாததுடன் ESI பதிவேடுகளும் இல்லை என்பதால் தொழில்சார் பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்தது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
குறிப்பிட்ட விபத்து தொழில்துறை பாதுகாப்பு தரங்கள், புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள், அபாயகரமான இரசாயனங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் மேற்பார்வை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால் இதனை கண்டு கொள்ளாதது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மனிதநேயமற்ற செயலாகும். அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறிய, நலன்களை காக்க தவறிய தொழிலாளர் நலத்துறையினை சேர்ந்த அதிகாரிகள் மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
உரிம மீறல், அதிக தொழிலாளர்கள், ஓய்வுநாளில் வேலை, பாதுகாப்பு நெறிமுறைகள் மீறல் என விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளால் தொடர்ந்து விபத்துக்கள் அரங்கேறி உயிர்கள் பறிபோகிறது. இதுபோல் விதிமீறல்களால் தொடர்ந்து ஆலைகளில் விபத்து நிகழ்வதும் அப்பாவி தொழிலாளர்கள் மரணம் அடைவதும் விபத்து செய்தியாகவே காலாவதியாகிப் போகிறது. இதில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆலை உரிமையாளர்கள், கடமை தவறிய அரசு அதிகாரிகள் காப்பாற்றப்படுவதால் இவ்விபத்துக்கள் தொடர்நிகழ்வுகளாகி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்தும் 1774 ஆலைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் உரிமை, பாதுகாப்பு, நலன் கடைபிடிப்பதை உடனடியாக அரசு உறுதி செய்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply