சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கொளத்தூரில் தண்ணீரின்றி தத்தளிக்கும் வண்ண மீன் வர்த்தக மையம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சென்னை கொளத்தூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட முடியாத நிலையில் உள்ள வண்ண மீன் வர்த்தக மையம்

சென்னை-கொளத்தூர் பகுதி இந்தியாவிலேயே வண்ண மீன் வர்த்தகத்தில் மிக முக்கிய மையமாக திகழ்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இவ்வர்த்தகம் வளர்ந்து உள்ளது. கொளத்தூர் மற்றும் இதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை ஓரகடைகள், சிறு உற்பத்தி யூனிட்டுகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை/ஆன்லைன் விற்பனை, ஏற்றுமதி மூலம் 100 வகைகளுக்கு மேல் அழகுமீன்கள், மீன் டேங்குகள், உணவு மருந்துகள் உள்ளிட்டவை இங்கு விற்பனை ஆகின்றன.

உள்நாடுகளுக்கு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து அழகுமீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இப்பகுதி முக்கிய வியாபார மையமாக மாறி உள்ளது. இந்நிலையில் இத்தொழிலை மேம்படுத்திடும் நோக்கத்தில் கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையத்தினை கடந்த 2025 அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.53 கோடி செலவில் CMDA சார்பில் கட்டப்பட்ட இம்மையம் 188 கடைகள், உணவகங்கள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் பிரமாண்டமாக காட்சி அளித்து வருகிறது.

இருப்பினும் இம்மையத்தில் தற்போது 2 முதல் 20 கடைகள் வரையே செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. வண்ண மீன் வர்த்தகர்களுக்கு என புதிதாக மையம் அமைக்கப்பட்ட போதிலும் அவர்கள் மேற்கு மாடவீதி மற்றும் அருகாமையில் உள்ள இடங்களிலேயே முன்புபோல் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட வர்த்தக மையம் காற்று வாங்கி கொண்டு இருக்கிறது. இம்மையம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் வண்ண மீன்களுக்கு சுத்தமான, சரியான PH கொண்ட நீர் மிக முக்கியம். இம்மையத்தில் அத்தகைய அடிப்படை வசதி இல்லாததால் மீன்கள் வாழ்வது கடினம் என்பதால் இங்கு வர்த்தகம் செய்ய முடியவில்லை என்கின்றனர் வியாபாரிகள்.

பெரிய டேங்குகள், மீன் பொதிகளை மேல்தளங்களுக்கு கொண்டு செல்ல லிஃப்ட் வசதி இல்லை. இதனால் 3 தளங்கள் கொண்ட இக்கட்டிடத்தில் வர்த்தகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. சேமிப்பு கிட்டங்கி வசதி இல்லாததால் அலைச்சலுக்கு உள்ளாவதுடன் கடை வாடகையும் கூடுதலாக உள்ளதால் பொருளாதார இழப்பிற்கும் ஆளாகும் நிலைக்கு உள்ளாகி தவித்து வருகின்றனர். குறிப்பிட்ட வியாபாரிகளின் நலனிற்காக கட்டப்பட்ட இம்மையம் அவர்களது நலனைப் பற்றி அக்கறை கொள்ளாததால் இத்திட்டம் தோல்வியினை தழுவி உள்ளது.

குறிப்பிட்ட வர்த்தக கட்டிடம் மால் போன்ற அமைப்புடன் தோற்றம் அளிக்கும் நிலையில் வண்ண மீன் வர்த்தகத்திற்கு ஏற்ற வகையில் நீர் சுழற்சி/ காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் குறிப்பிட்ட வர்த்தக மையத்தினை வர்த்தகர்கள் புறக்கணித்து வருகின்றனர். வண்ண மீன் வர்த்தகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு வியாபாரிகளிடம் கூடுதல் வாடகை உள்ளிட்ட நெருக்கடிகளை தவிர்த்தால் இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ண மீன் வர்த்தக மையம் என்ற அந்தஸ்தை தக்க வைக்க முடியும். அரசு கவனம் செலுத்துமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *