சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சீர்திருத்த சட்டம் தேவை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சிறை சீர்திருத்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தும் சமூக பொதுநல இயக்கம்

நாகர்கோவில் சிறையில் கடந்த 13ந்தேதி விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்துள்ள நிலையில் இக்கொலை தொடர்பாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் கைதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறைச்சாலை உள்ளேயே நிகழ்ந்த இத்தகைய நிகழ்வு கடும் கண்டனத்திற்கு உரியது. இத்தகைய சம்பவம் நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையினை சீர்குலைப்பதாக உள்ளது.குற்றம் நோயுற்ற மனதின் விளைவு. சிறை மருத்துவமனை போல் இருக்க வேண்டும் என்றார் மகாத்மா காந்தி.

குறிப்பிட்ட கொலை வழக்கில் விசாரணை விரைவாகவும், வெளிப்படையாகவும் முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இத்தகைய நிலை தொடராமல் தடுக்கும் வகையில் துணை மற்றும் மத்திய சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், ஊழியர் பற்றாக்குறை, கும்பல் செயல்பாடுகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். கட்டாய மனித உரிமை பயிற்சி, வன்முறை தடுப்பு, மன அழுத்த மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பல இடங்களில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக கட்டுப்பாடு இழக்கும் நிலை உள்ளதால் போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

சிறையில் படுகொலை செய்யப்பட்ட விசாரணை கைதி அடைக்கப்பட்ட அறையில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 21 கைதிகள் இருந்து உள்ளனர். இறந்தவர் மாற்றுத்திறனாளி மற்றும் விசாரணை கைதியாக இருந்தபோதும் கடும் குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டது நிர்வாக குறைபாடுகளையே காட்டுகிறது. சிறை சீர்திருத்தம் தேவை என்பதையே தெள்ளத் தெளிவாக்குகிறது. நீதிபதி ஏ.என். முல்லா தலைமையில் 1980ல் அமைக்கப்பட்ட அகில இந்திய சிறைச்சாலை சீர்திருத்தக்குழு சிறை சீர்திருத்தங்கள் தொடர்பாக 658 பரிந்துரைகளை அளித்து உள்ளது.

விசாரணை கைதிகளை குறைத்தல், அவர்களை தண்டனை குற்றவாளிகளிடம் இருந்து பிரித்தல், விரைவான விசாரணை, பெண்கள், இளம் குற்றவாளிகள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு தனி இடம், சிறை கைதிகளுக்கு மருத்துவ வசதி, கண்காணிப்பு என பல முடிவுகளை முன்மொழிந்தன. இக்குழுவின் பரிந்துரைகள் பின்னர் வந்த Model Prison Manual 2003 மற்றும் 2016 உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. இதுபோல் இந்தியாவின் சிறைச்சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1894 ல் இயற்றப்பட்டது. கைதிகளை சிறையில் வைத்திருப்பதை மட்டுமே இது கருத்தில் கொள்கிறது.

காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை செய்து கடந்த 2023ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் Model Prisons and Correctional Services Act 2023 கொண்டு வந்தது. இருப்பினும் இது நடைமுறைப்படுத்தப் படாத நிலையில் பழைய சட்டத்தையே பல்வேறு மாநிலங்களும் கடைபிடித்து வருகின்றன. சிறைச்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள்/ தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்பாடு, நீண்டகாலம் விசாரணை கைதிகள் சிறையில் உள்ளது/ அடிப்படை வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ள சூழலில் சிறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பேசப்படுகிறதே ஒழிய செயல்பாட்டிற்கு வரவில்லை. தமிழக அரசு இதுதொடர்பாக சீர்திருத்த சட்டத்தை செயல்படுத்துவதின் மூலமே இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *