சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெவிசன் ( வயது 26) பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 5 ந்தேதி பக்கத்து ஊரைச் சேர்ந்த இருவரை கொலை முயற்சி செய்ததாக கூறி 6ந்தேதி மானாமதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின்போது ஆகாஷ் தப்ப முயன்று பாலத்தில் இருந்து குதித்ததால் கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். போலீசார் தனது கண்களை கட்டி கொடூரமாக தாக்கியதாகவும், அப்போது வலதுகால் அவர்களால் உடைக்கப்பட்டதாகவும் ஆகாஷ் தனது இறுதி வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். படுகாயம் அடைந்த ஆகாஷ் இம்மாதம் 11ந்தேதி மதுரை அரசு மருத்துவமனையில் வைத்து உயிர் இழந்தார்.பரிசோதனையில் உடலில் 28 இடங்களில் காயம் இருந்ததும், மூளையில் ரத்தகசிவு உள்ளதும் தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகைத் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட வடு மறைவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி மனதை ரணமாக்கி உள்ளது.கடந்த 2023ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இறந்த 17 வயது சிறுவன் உடலில் 95க்கும் மேற்பட்ட காயங்கள் காவலர்களின் சித்ரவதையினை காட்டுவதாய் உள்ளது. 2020 ஜூன் கொரானா ஊரடங்கு விதிமீறல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு போலீசாரால் கொடூரமாய் கொல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ் -பென்னிக்ஸ் வழக்கு மார்ச் 23 வெளியாகும் தீர்ப்பினை எதிர்பார்த்து உள்ளோம்.இவ்வாறு 2021 முதல் 2026 வரை 37 காவல் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. 2011 முதல் 2019 வரை 80+ மரணங்களும் 2016 முதல் 2021 வரை 46 காவல் மரணங்களும் நிகழ்ந்து உள்ளன.NCRB மற்றும் NHRC தரவுகளின்படி காவல் மரணத்தில் தமிழகம் தென்னிந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
தமிழகத்தில் இவ்வாறு காவல் மரணங்களில் பாதிக்கப்படுபவர்கள் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எனதெரியவருகிறது. 2024ல் சிறு குற்றவாளிகளில் சுமார் 300 பேர் அதிக சித்ரவதை, உடைந்த எலும்புகளுடன் சிறைக்கு அனுப்பபட்டதாக RTI மூலம் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக காவல் மரணங்களில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கைகளோ, தண்டனைகளோ வழங்காதது குற்றத்தை அதிகரிக்க செய்து உள்ளது. இதனால் குற்றவாளிகள் மீது மின்சாரம் பாய்ச்சுவது, அடித்து சித்ரவதை செய்வது, தூங்கவிடாமல் இருக்க வைப்பது, கால்,கையினை முறித்து கழிப்பறையில் வழுக்கியதாய் கூறுவது என தொல்லைகள் எல்லைகள் இல்லாமல் விரிகிறது.
திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் ஒன்றுமில்லாத காரணத்திற்காக ஒரு இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது.நகை திருட்டு போனதாக நிகிதா என்பவர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கூறியதின்படி உயர் அதிகாரிகள் வரை ஈடுபட்டு உயிர் பறிப்பு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலையில் பாதிக்கப்பட்டவர்கள் சென்று முறையிட்டும் காவல்துறை அலட்சியப் போக்குடன் செயல்பட்டு உள்ளது. இதன் மூலம் காவல்துறை யாருக்கு சேவகம் செய்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் காவல் மரணங்கள் மனித உரிமைக்கு எதிரானதாக உள்ளதோடு சாதி அடிப்படையிலான அணுகுமுறை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்டவை காவல்துறையினரின் அத்துமீறலையும், ஜனநாயக விரோதப்போக்கினையும் தோலுரித்து காட்டுகிறது. இதனை தடுக்க காவல்துறை சீர்திருத்தம், சுதந்திர விசாரணை, சித்ரவதை தடுப்பு வழிகாட்டுதல்கள்,CCTV கண்காணிப்பு, குற்றத்திற்கு உள்ளான காவலர் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் மக்களை பாதுகாக்கும் காவல்துறை என்னும் நிலைமாறி காவல்துறையிடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய நிலையே உருவாகும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply