சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இந்தியாவின் தென்கோடி எல்கையான குமரி மாவட்டம் அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் சங்கமிக்கும் பகுதியாகும். 71.5 கி.மீ நீள கடற்கரைக் கொண்ட குமரி மாவட்டத்தில் இதையொட்டி ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான 47 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலைச் சார்ந்து சுற்றுலா, மீன்பிடித்தொழில் நடைபெற்று வருகிறது. சுமார் 4கி.மீ நீளம் கொண்ட சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பல வண்ணம் கொண்ட மணல், மீன்பிடி துறைமுகங்கள், மாங்குரோவ் காடுகள் என எண்ணற்ற கடல்சார்ந்த தனித்துவம் மிக்க பகுதிகள் மாவட்டத்தில் காண்போரை வசீகரிப்பவை ஆகும். இந்நிலையில் இக்கடற்கரை பரப்பு ஆண்டுக்கு 2.96 மீட்டர் கடலால் விழுங்கப்பட்டு வருகிறது.
தேங்காய்பட்டணம், கீழமணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம், இனையம், நீரோடித் துறை உள்ளிட்ட மாவட்டத்தின் மேற்கு பகுதி தொடர்ந்து கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. 37% பகுதி உயர் ஆபத்து உள்ள பகுதிகளாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2007 முதல் 2024 வரை நிகழ்ந்த தொடர் கடல் அரிப்புகளால் வீடுகள், நிலம், படகுகள் பறிபோனதுடன் சாலை இடிந்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதன்மூலம் இதைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. கடந்த 2016 ல் முள்ளூர் துறை பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் கபளீகரம் செய்தது. இது போல் தொடரும் நிகழ்வுகள் இப்பகுதி மக்கள் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்ட உயர்வு, கடல் சீற்றம், துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களின் தாக்கம், இயற்கை மணல் திட்டுக்கள் அழிப்பு, ஆறுகளின் வழியாக வரும் மணல் தடுப்பு, பாறைத் தீபகற்பம் காரணமாக அலைகளின் திசைமாற்றம் உள்ளிட்டவற்றால் இவ்வகையான பாதிப்புகள் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.குமரி கடற்கரைப் பகுதியில் இயற்கையாக குவியும் பிளேசர் டெபாசிட்கள் எனப்படும் மோனாசைட், இல்மனைட், ரூட்டைல் சிர்கான் உள்ளிட்ட அரியவகை மண் கனிமங்கள் உள்ளது. கடந்த 1963ல் தொடங்கப்பட்ட மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல் ஆலையால் 178.06 ஹெக்டேர் பரப்பிலான மணல் அள்ளப்பட்டு இயற்கை பாதுகாப்பு பலவீனமானதால் கடற்கரை இயற்கை அமைப்பே மாறிப்போனதுடன் பல்வேறு பின்விளைவுகளுக்கும் காரணமானது.
இயற்கை பாதுகாப்பு அடுக்குகளை பலவீனப்படுத்துவதால் அலைகளின் தாக்கம் அதிகரிப்பதோடு பெரும்பாலான நிலப்பரப்புகளும் கடலுக்கு காவு கொடுக்க நேரிடுகிறது. இருந்த போதிலும் கடற்கரை கட்டமைப்புகளையும், சுற்றுசூழலையும், சுகாதாரத்தையும் சீரழிக்கும் வகையில் 1144 ஹெக்டேர் அளவில் அணுக் கனிம சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மேலும் கடல் அரிப்பு இப்பகுதியில் ஏற்படுவதோடு கடல்நீர் புகும் நிலை, விவசாயம் , நிலத்தடி நீர்பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை இதைச் சார்ந்த பகுதி மக்கள் சந்திக்கும் .அவலநிலை உள்ளது. எனவே கடலுக்கு கரையினை இரையாக்கிடும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை/NCCR போன்ற அமைப்புகளின் பரிந்துரைகளை செயல்படுத்திடவும், CRZ விதிகளை கடுமையாக அமலாக்கி கடற்கரை காக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் TN.SHORE MISSON (Tamil Nadu_Strengthening Coastal Resilience and Economy) திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் கடலோர மீட்பு மற்றும் நிலையான வளர்ச்சி பணிகளை 1675 கோடி செலவில் செயல்படுத்திட அரசு முயன்று வருகிறது. செப்டம்பர் 2025ல் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், இராமனாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்கள் முக்கிய கவனம் கொள்ளும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குமரி மாவட்டத்தின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அதனை தடுத்திடும் நோக்கத்தில் இப்பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தையும் இணைத்து இந்திய தென்கோடி அடையாளமாக திகழும் இக்கடற்கரை பரப்பை பாதுகாத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply