சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி கடற்கரையில் குவியும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார் .

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்

குமரி மாவட்ட கடலோரப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதார பகுதியாகவும் அறியப்படும் இடங்கள் என்றாலும் அவை கடுமையான அசுத்தம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய அறிக்கையின் படி மாநிலத்தின் 13 கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள் மிகவும் அசுத்தமானதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய நிலை மனிதச் செயல்பாடுகள் மூலமே ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி நகரப்பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்கள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. சுற்றுலா பயணிகளால் தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் 65% இத்தகைய பாதிப்பிற்கு காரணமாகிறது. மீன்பிடி வலைகள், படகு உபகரணங்கள் சிதைவதால் மைக்ரோபிளாஸ்டிக் சராசரியாக 4 – 6 items/m2 அளவுக்கு அதிகரித்து உள்ளது. கடற்கரையில் காணப்படும் கழிவுகளில் சுமார் 96.87% நில அடிப்படை ஆதாரங்களில் இருந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முட்டம் ஊராட்சி கடியப்பட்டணம் பகுதியில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் கடற்கரையில் செயல்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டு உள்ளன. இக் குப்பைகள் பெருமளவில் கடலோடு கலக்கும் நிலையே நிலவுகிறது. இது போலவே மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை முறையாக செயல்படுத்தாமலும், கடற்கரை பகுதி தூய்மைபடுத்தலுக்கு உரிய அக்கறை காட்டாததாலும் கடற்கரை பகுதிகள் கழிவுகளின் முகத்துவாரம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

கடல்நீரில் கழிவுநீர் கலப்பதால் faecal bacteria அளவு அதிகரிக்க காரணமாகிறது. கழிப்பறை வசதிகள் மற்றும் பொது இடங்களின் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் அதிகமான அளவில் சேகரமாகும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இதனால் சுற்றுலாப்பயணிகள், கடல் வாழ் உயிரினங்கள், மீனவர்கள் உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலையே இப்பகுதி எதிர்நோக்கி உள்ளது. எனவே கடல்சூழலையும், கடலோர பகுதிகளையும் காக்கும் வகையில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்டத் தலைவர் T குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, மீனவர் அணிச் செயலாளர் A.ததேயுஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் CV.முருகன், மகளிர் அணிச் செயலாளர் Rசாராபாய் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

குமரி கடற்கரையில் குவியும் குப்பைகள்: சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
கன்னியாகுமரி கடலோர பகுதிகள் ஏன் மாசுபடுகின்றன?
கடற்கரை மாசுபாடு: சுற்றுலா மற்றும் மீனவர் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு
குமரி கடற்கரையை காப்பது யார்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி
கடலில் கலக்கும் கழிவுநீர்: கன்னியாகுமரி கடற்கரையின் அவலநிலை
பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு: கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
கடற்கரை சுத்தம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அவசியம்
குமரி கடலோர மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *