குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகர்- மணியன் நகர் இடைப்பட்ட பகுதியில் மழைக்காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளம் செல்லும் வழிமறிச்சான் ஓடை உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஓடையினை ஆக்கிரமிப்பு செய்து ஆரல்வாய்மொழி பேரூராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சமூக பொதுநல இயக்கத்திடம் புகார் தெரிவித்தனர்.
வழிமறிச்சான் ஓடை வழியாகவே மூவேந்தர் நகர் சுடுகாடு மற்றும் இங்குள்ள குடியிருப்புகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதி மக்கள் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு தொடர்பாக முறையிடவே ஜே.சி.பி எந்திரங்களை கொண்டு பேரூராட்சி சார்பில் சர்வாதிகார போக்குடன் மக்களை அச்சுறுத்தும் விதமாக இங்குள்ள குடியிருப்புகளை இடிக்க முயன்றனர். தொடர்ந்து இப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். சமூக பொதுநல இயக்கம் இதில் தலையிட்டு இப்பகுதி மக்கள் உரிமையினை மீட்டு எடுத்தது.
இதன் பேரில் குறிப்பிட்ட நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பின் அதனை அகற்றிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் சார்பில் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தபட்ட இடத்தில் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இப்பணியில் வருவாய்துறை, பொதுப்பணித்துறை, பேரூராட்சி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
15 வது நிதிக்குழு மூலம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி சார்பில் மணியன் நகரை ஒட்டி நடைபெறும் பூங்காவிற்கென வழிமறிச்சான் ஓடை பகுதியில் உள்ள சுமார் 9 சென்ட் இடத்த்தினை பேரூராட்சியே ஆக்கிரமிப்பு செய்து உள்ளது இந்த அளவீட்டுப் பணியில் தெரியவந்தது. வேலியே பயிரை மேய்வது போல சட்டதிட்டங்களை கடைபிடிக்க வேண்டிய பேரூராட்சியே சட்டத்தை மீறியது இதன்மூலம் தெரியவந்து உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் பூங்கா பணி அமைப்பதற்கென முறையாக இடத்தை அளக்காமல் கட்டுமானப்பணிகள் பேரூராட்சி மேற்கொண்டதும், பூங்காவிற்கு என ஒதுக்கப்பட்ட நிலம் இல்லாத நிலையில் பொதுப்பணித்துறைக்கு உரிய இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே குறிப்பிட்ட ஆக்கிரமிப்பினை அகற்றிடவும், ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply