சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தடுப்பணைகள் கட்ட அனுமதிமறுப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு

தடுப்பணைகள் அமைப்பதின் மூலம் மழைநீரை தேக்கி மண்ணிற்குள் ஊடுறுவ வைப்பதால் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர் அளவு உயர்வதோடு இவை கிராம குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாகிறது. நீர்நிலைகளின் நீர் ஓட்ட வேகத்தை குறைத்து மண் சேதத்தை தடுக்கிறது. அதிக வெள்ளத்தை கட்டுபடுத்தி பாதிப்பை குறைக்கிறது. ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற தடுப்பணையே சிறந்த தீர்வு. தமிழ்நாட்டின் நீர் பாதுகாப்பு, விவசாய எதிர்காலம், வறட்சி எதிர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு அவசிய தேவை தடுப்பணைகள்.

குமரி மாவட்டத்தில் பழையாற்றின் குறுக்கே 11 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. வள்ளியாற்றில் 10 தடுப்பணைகள், தூவலாற்றில் 6 தடுப்பணைகள், பன்றி வாய்க்காலின் குறுக்கே 5 தடுப்பணைகள், குழித்துறை ஆற்றின் குறுக்கே 2 அணை கட்டுகள்/ 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது..இவை அனைத்தும் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. குறிப்பாக பழையாற்றில் உள்ள தடுப்பணைகளான வீரப்புலி அணை வீர உதய மார்த்தாண்ட வர்மாவால் 1517-1537 ல் கட்டப்பட்டது. பள்ளி கொண்டான் அணை வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் 1749லும் சாட்டுபுதூர் அணை 1729-1758 காலகட்டத்திலும் கட்டப்பட்டது.

குட்டி அணை, செட்டித்தோப்பு அணை/ வீரநாராயணமங்கலம் அணை, சபரி அணை, குமரி அணை, பாண்டிய மன்னர், பிள்ளை பெத்தான் அணை வேணாட்டு மன்னர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. மிஷன் அணை 1825ல் லண்டன் மிஷனரி சார்லஸ் மீட் என்பவரால் கட்டப்பட்டது.பாண்டிய மன்னரான இராஜசிம்மன் ஆட்சிகாலத்தில் பரளியாற்றின் குறுக்கே பாண்டியன் அணை கட்டப்பட்டது. ஆய் மன்னர்கள் காலத்தில் குமரி மாவட்டத்தில் நீர்வழிப்பாதைகள் மேம்படுத்தப்பட்டது. சோழர்கள் ஆட்சிகாலத்தில் நீர் மேலாண்மை மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2010ல் திறக்கப் பட்ட மாம்பழத்துறையாறு அணைக்கு பின் இதுவரை மாவட்டத்தில் புதியதாக எந்த ஒரு அணையோ, தடுப்பணையோ கட்டப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 2000 மி.மீட்டருக்கு மேல் மழை பொழிந்தும் அதனை உரியமுறையில் சேமித்து வைக்க போதிய தடுப்பணைகள் கட்டப்படாத நிலையில் 11, 200 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. மாவட்டத்தில் 55 இடங்களில் தடுப்பணைகள் கட்ட சாத்தியகூறுகள் இருப்பதாக ஆய்வு செய்த போதும் அவை செயல்பாட்டில் வராமல் முடங்கி உள்ளன. முல்லையாற்றில் தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்தபின்பும் இத்திட்டம் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது.

குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளதாக கூறி தமிழக அரசு இப்பகுதியினை Safe Zone என வகைப்படுத்தி உள்ளது. இதனால் இங்கு தடுப்பணைகள் கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது.மத்திய நிலத்தடி நீர் வாரியம்(CGWB) தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை (WRD) ஆகியவை அளித்த அறிக்கையின்படி குமரி மாவட்டம் முழுமையாக இதன் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே அளவுகோலைக் கொண்டு மாவட்டத்தில் தடுப்பணை திட்டங்களை நிராகரிப்பது கண்டிக்கதக்கது.இதனால் நீரை முறையாக சேமிக்க முடியாததால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கும் ஆபத்தே உள்ளது.எனவே மாவட்டவளம் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் முடங்கி கிடக்கும் தடுப்பணை திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *