சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சென்னை- திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான ECR எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 14.20 கி.மீ நீளமுள்ள 4 வழி உயர்மட்ட சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்க கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ2100 கோடி. இதில் பங்கேற்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட் காப் நிறுவனம் ஹைதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை விட 700 கோடி குறைவானத் தொகையில் ஏலம் விட்டது. ஆனால் திலிப் பில்ட் காப் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் உரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் அவர்களின் டெக்னிகல் பிட் (தொழில்நுட்ப ஏலம்) சரியில்லை எனக் கூறி நிராகரித்தது.
கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ஏலம் வழங்க தமிழ்நாடு அரசு டெண்டர் காலக்கெடுவை பலமுறை நீட்டித்தது. ஆகஸ்ட் 25 ல் வெளியிடப்பட்ட டெண்டர் இதனால் டிச 29 வரை இழுத்தடிக்கப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தை தக்க வைக்க முயன்றது தெரியவருகிறது. மேலும் கே.என்.ஆர் நிறுவனம் குமரி முதல் மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் வரை செல்லும் NH 66 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையினை மறுசீரமைக்கும் பணியினை மேற்கொண்டது. இதில் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சாலையில் விரிசல்களும், சேதங்களும் ஏற்பட்டது.
இதனால் கே.என்.ஆர் நிறுவனத்தினை தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள தகுதிபெற்ற நிறுவனங்கள் பட்டியலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கி இதனை கருப்பு பட்டியலில் சேர்த்தது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிறுவனத்தை குறிப்பிட்ட பணிக்கான டெண்டரில் இணைத்தது அப்பட்டமான விதிமீறல் ஆகும். ரூ 700 கோடி வரையில் அதிகத் தொகையில் குறிப்பிட்ட நிறுவனம் ஏலம் எடுப்பதற்காக, அதன் மூலம் பயன் அடைவதற்காக மட்டுமே குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்த்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது தொடர்பாக திலிப் பில்ட் காப் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிபதிகள் கே.என்.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க தடை விதித்து உள்ளனர். தரமற்ற முறையில் பணிகள் மேற்கொண்டு தடைவிதிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மக்கள் நலனை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் அவர்களிடம் மட்டுமே பணிகளை தாரை வார்க்க தமிழக அரசு துடித்தது ஏன்? என்பது சொல்லித் தான் தெரியவேண்டும் என்பது இல்லை.
தடை விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனம் தமிழகத்தில் மேற்கொண்ட பணிகளை மக்கள் நலன்கருதி மறுஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் மக்கள் பணத்தினை விரயமாக்கிடும் வகையிலும், முறைகேட்டிலும், விதிமீறல்களிலும், நிர்வாக சீர்கேட்டிலும் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றிய விபரத்தினை வெளிப்படைத்தன்மையுடன் முறையாக விசாரணை நடத்தி தமிழக அரசு மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தங்கள் நம்பகத்தன்மையினை நிரூபித்தாக வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply