சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கனிமவளக்கொள்ளையினை அங்கீகரிக்கிறதா தமிழக அரசு? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் பகுதியில் கனிமவளக் கொள்ளை தொடர்பாக கடந்த மாதம் 30ந் தேதி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை ஸ்ரீரங்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகார் அளித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில் தாக்கிய நபர்கள் அளித்த புகாரின் பேரில் பத்திரிகையாளர்கள் மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இத்தகைய நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதி M.L.A மற்றும் கும்பலை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் கனிமவளக் கொள்ளையர்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் எல்லையின்றி கொள்ளையடிக்கப்பட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் வளக் கொள்ளையை தடுக்க திராணியற்ற நிலையில் தமிழக அரசு உள்ளது. மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இக்கொள்ளையால் தமிழக நீர் வளம், நிலவளம், விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் அடியோடு பாதிப்பு அடைவதோடு நிலநடுக்கம், பருவகால மாற்றம், காற்று திசைமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் இவை அடிப்படையாய் திகழ்கின்றன. எதிர்கால வாழ்வையும், நமது மண்ணையும் கேள்விக்குறியாக்கும் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட போதும் அரசியல் ஆதிக்க சக்திகள் இக்கொள்ளையினை தங்கு தடையின்றி அரங்கேற்றி வருகின்றன.

ஆட்சிக்கு வந்ததும் இயற்கை வளங்களை காப்போம் என்றவர்கள் கள்வர்களை காக்கும் விதமாய் செயல்பட்டு வருகின்றனர். கனிமவளக் கொள்ளையினை தடுக்க முயல்பவர்கள் கொலை செய்யப்படுவதும், புகார் அளிப்பவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. இக்கொள்ளையில் கோடிகள் புரள்வதால் அதனை இழக்க மலை மாஃபியாக்கள் தயாராக இல்லை. இதனால் இயற்கை வளம், சுற்றுசூழல் பற்றி அவர்கள் கவலை கொள்வதாக இல்லை.

மேலும் இவர்களுக்கு உதவும் விதமாய் தமிழக அரசின் சமீபத்திய அரசு ஆணை G.O’ (MS) No.3 (நாள்.22.1.26) கனிமவளக் கொள்ளையினை அங்கீகரிக்கும் விதமாகவே உள்ளது. இதன்படி OTR எனப்படும் திட்டத்தின் படி ஒழுங்குபடுத்திடும் விதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் ஒரு மெட்ரிக் டன்னிற்கு ரூ25 வீதம் என வசூலிக்கவும் இதில் 20% கட்டி விட்டு மீதத்தொகையினை தவணை முறையில் ஒருவருட கால அவகாசத்தில் கட்டிக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சட்டதிருத்தம் கனிமவளக் கொள்ளையினை தடுப்பதற்கு பதில் அதற்கு அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது.

இத்தகைய நடைமுறை உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும், இயற்கை நலனிற்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும் எதிராகவே உள்ளது. எனவே கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவான இந்த அரசு ஆணையினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்வதோடு சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளையினை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் விதமாய் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *