சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கல்குவாரிகளால் அழிவின் விளிம்பில் தவிக்கும் வேளிமலை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி வேளிமலையில் நடைபெறும் கல்குவாரி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மலைப்பகுதி

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் குமரி மாவட்ட மையப்பகுதியில் வானளாவிய தோற்றத்தில் பார்வதிபுரம் முதல் பத்மனாபபுரம் வரை 12 கி.மீ தூரத்திற்கு 8கி.மீ அகலத்தில் பரந்து விரிந்து காட்சி அளிப்பது வேளிமலை. கோதநல்லூர், முட்டக்காடு, பத்மனாபபுரம், தக்கலை இரணியல், தலக்குளம், திருநயினார் குறிச்சி, மணவாளகுறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை பசுமையாக்கி கடியப்பட்டணம் அரபிக்கடலில் கலக்கும் வள்ளியாறு வேளிமலையில் தான் உற்பத்தி ஆகிறது. இம்மலையில் இது மட்டுமில்லாது 10க்கும் மேற்பட்ட சிற்றாறுகளும், அருவிகளும் இம்மலை அடிவாரப் பகுதியில் மாம்பழத்தாறு அணை, முக்கடல் அணைகளும் உள்ளன. மேலும் வெண்கடம்பு உள்ளிட்ட அபூர்வ தாவரங்களும், எண்ணற்ற விலங்குகளின் வாழ்விடமாக உள்ளதோடு உயிர் பன்மயம் கொண்ட தனித்துவம் மிக்கதாக இப்பகுதி திகழ்கிறது.

தென்மேற்கு பருவமழைக்காலத்தில் ஈரபதம் மிகுந்த அரபிக்கடல் காற்றை தடுத்து நிறுத்தி மாவட்டத்தில் மழை பொழிய இம்மலைகளே காரணமாகிறது. வெப்பசலன காலங்களில் மழை மேகங்களை உருவாக்கி ஈரக்காற்றை மேல்நோக்கி குவிய செய்வதில், கோடைமழையாய் கொடை அளிப்பதில் வேளிமலையின் பங்கு முக்கியமானது.குமரி மாவட்டத்தில் காலநிலை 23.5°C முதல் 32.9°C வரை வெப்பநிலை நிலவவும், 82% ஈரபதம் உருவாகவும் 940 மீட்டர் உயரம் கொண்ட இம்மலைகளே காரணகர்த்தாவாகிறது.யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்ட இப்பகுதி வழிபாட்டு, பண்பாட்டு மற்றும் இயற்கை அன்னையின் சரணாலயமாகவும் திகழ்கிறது.

இந்நிலையில் இம்மலை பகுதியில் 4.19 ஹெக்டேர் பரப்பளவில் 6 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு 200 அடி உயரமுள்ள மலைகளை 150 அடி ஆழத்திற்கு உடைத்து வருகின்றனர். சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய குவாரிகளால் பாரம்பரிய இப்பகுதி உருக்குலைந்து வருவதோடு இங்குள்ள சோலைவனம் பாலைவனமாகி வருகிறது. வெடிப்பொருட்கள் கொண்டு பாறைகள் உடைக்கப்படுவதால் இதன்மூலம் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதோடு இப்பகுதி மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் உள்ளாவதோடு மலைப்பகுதி மண் அரிப்பு, நிலசரிவுக்கு காரணமாகிறது.

தீவிரமாக நடைபெற்று வரும் மலை உடைப்பினால் நீர் ஆதாரங்கள் முற்றிலுமாய் பாதிப்பிற்கு உள்ளாவதோடு வள்ளியாறு நீர்வரத்து தடைபடும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள விவசாய விளைநிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதும் குடிநீர் பஞ்சம் உருவாவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.மலை உச்சிப்பகுதிகள் உடைபடுவதால் காற்று திசைமாற்றம் ஏற்பட்டு காலநிலை மாற்றத்திற்கும் இவை காரணமாகின்றது.

இது போலவே எத்தனையோ பாதிப்புகள் உருவாக இங்குள்ள மலை உடைப்புகள் அடிப்படையாக இருந்தும் தடை ஏதும் இன்றி கனிமவளங்கள் சூறையாடப்படுவதால் வேளிமலை அழிவின் விளிம்பில் அழுது தவிக்கிறது. எனவே சூழலியல் பேரழிவை தடுக்க வேளிமலைப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத குவாரிப் பணிகளை தடுத்து வனப்பகுதிகளை பாதுகாக்க அவசர நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை போல் உடனடி நடவடிக்கை தேவை.

வேளிமலையை விழுங்கும் கல்குவாரிகள்: குமரியின் இயற்கைச் செல்வம் ஆபத்தில்
சட்டவிரோத குவாரிகளால் வேளிமலை அழிகிறதா?
வேளிமலை பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை
வள்ளியாற்றின் பிறப்பிடமான வேளிமலைக்கு பெரும் அச்சுறுத்தல்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் குவாரி பணிகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
வேளிமலை அழிவின் விளிம்பில்: நீர்வளம் மற்றும் உயிர்ப்பன்மை பாதிப்பு
கல்குவாரிகளால் பாலைவனமாகும் வேளிமலை?
கன்னியாகுமரியின் இயற்கை அரணான வேளிமலையை காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *