சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட வைகை ஆற்றின் காட்சி

தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகை ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி சுமார் 260கி.மீ பயணித்து இராமனாதபுரம் அருகே ஆற்றங்கரை என்னும் சிற்றூரில் கடலில் கலக்கிறது. இதன்மூலம் 24 அணைகள் வழியாக தேனி,மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமனாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முன்னர் 600 மீட்டர் அகலத்திற்கு இருந்த வைகை தற்போது ஆக்கிரமிப்புகளால் 195 மீட்டர் அளவுக்கு சுருங்கி போனது.

குறிப்பாக வைகை கடலில் சங்கமிக்கும் இராமனாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளால் பெரும்பாலான இடங்களில் ஆறு இல்லாமல் போய்விட்டது. கட்டிடங்கள், சாலைகள், வீடுகள், குப்பைத்தொட்டிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளால் வைகையினை இங்கு தேடவேண்டிய அவலநிலையில் உள்ளது. பரமக்குடி, மஞ்சப்பட்டினம், காட்டு பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆறு மணல் மேடாக மாறி உள்ளது. ஆறு ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டதால் வரைபடத்தில் ஆறு இருப்பினும் நீர்வழித்தடத்தில் ஆறே தென்படவில்லை. கழிவுகள் கொட்டப்படும் கிடங்காக மாறியதோடு ஆகாய தாமரைகள் மற்றும் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் வைகை ஆறு தனது அடையாளத்தினை இழந்து தவிக்கிறது.

ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர் செல்ல இயலாமல் 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வறட்சியில் தவிக்கின்றன. ஆற்று மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு நீருக்காக தவிக்கும் நிலையே உள்ளது. சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக வைகை இருந்த போதும் ஆறு அழிந்து ஓடையாக மாறி மாசுபாடு கொண்டதாக மாறியதால் மக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆற்றுப் பகுதி தனியார் ஆக்ரமிப்பு செய்து வீட்டுமனைகள் உருவாக்கி விற்பனை செய்து உள்ளனர். இத்தகைய ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் 2018 முதல் 2023 வரை பலமுறை உத்தரவு பிறப்பித்த போதும் இதுவரையில் அவை முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. மேலும் பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே பாதாள சாக்கடை இல்லாததால் கழிவுநீரைநேரடியாக ஆற்றில் விடும் நிலையில் யாரிடம் போய் முறையிடுவது என இப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இராமனாதபுரம் வறட்சி மாவட்டமாக திகழும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையும் குறைந்து போனதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடல் அருகாமை காரணமாக உப்புநீர் ஊடுருவலால் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க இயலாததாக உள்ளது. இதனை தவிர்க்கும் விதத்தில் வைகை ஆறு மீட்டுருவாக்கம் மேற்கொள்ளும் திட்டம் 2023ல் தொடங்கப்பட்டது. ஆனால் அதுவும் நத்தை வேகத்தில் நகர்வதால் வைகை நிலை மாறாததாகவே உள்ளது. எனவே இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பில் உள்ள வைகையினை மீட்டு இப்பகுதி நீர் தட்டுப்பாடு இல்லாத நிலையினை உருவாக்கிட ஆற்றை உயிர்ப்பிப்பது அவசர அவசியமானதாகும்.

வைகை மீட்பு திட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு. tamilnadu water crisis
தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு
நீர்வள மேலாண்மை செய்திகள்
வைகை ஆறு வரலாறு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *