சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த 13 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ 342.60 கோடி மதிப்பீட்டில் சென்னைக்கு நீர் வழங்கும் 6வது நீர்தேக்கத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 19.1.2026 அன்று நாட்டி உள்ளார்.இப்பகுதி கோவளம் அருகே நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான் குப்பம், பையனூர் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியாகும்.
உவர்நீரும் – நன்னீரும் ஒன்றுசேரும் இந்நிலப்பகுதியில் 195 தனித்துவமான உயிரினங்கள் வாழ்கின்றன. 190 பறவை இனங்கள் இங்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 65 இனங்கள் வலசை வரும் பறவை இனங்களாக அறியப்பட்டு உள்ளது. 143 பறவை ஆர்வலர்கள் வழங்கிய 12,484 ஆய்வறிக்கையின் படி 1900 முதல் 2025 மே வரை வரையிலான ஆய்வில் இவ்விபரம் கண்டறியப்பட்டு உள்ளது. நெம்மேலி பகுதி சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர் ஈரநிலமாகும். முக்கியத்துவம் வாய்ந்த உயிர் பன்மயமிக்க சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக குறிப்பிட்ட இடம் திகழ்கிறது.
இப்பகுதியில் வாழும் இறால்கள் இங்குள்ள 16 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது.இங்கு வாழும் உயிரினங்களுக்கு அவை தொடர்ந்து வாழ நன்னீரும், கடல்நீரும் கலக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில் குறிப்பிட்ட நிலப்பரப்பை நன்னீர் நிலமாக மாற்றினால் ஒட்டுமொத்த உயிர் சூழலும் மாறி சூழல்மண்டலமே சிதைந்துவிடும். உப்பங்கழி பகுதிகள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான இயற்கை அரணாக இருந்து பாதுகாக்கின்றன.
இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் குறித்தோ, இதன் சுற்றுவட்டார பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதார பாதிப்பு குறித்தோ, பல்லுயிர் பெருக்க அச்சுறுத்தல் குறித்தோ, காலநிலை மாற்ற பாதுகாப்பு குறித்தோ, நீண்டகால நிலைத்தன்மை பற்றியோ, நிலத்தடி நீரின் போக்கு பற்றியோ முறையாக எவ்வித ஆய்வுகள் மேற்கொள்ளாமல், இப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமல் மாமல்லன் நீர்தேக்கத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் அவசரகதியில் அடிக்கல் நாட்டியது ஏன்?
கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் வளர்ச்சி தடை செய்யப்பட்ட பகுதி (NDZ) என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் அரசு துறை அதிகாரிகளே சட்டத்திற்கு புறம்பாக விழா மேடைக்கு செல்ல கான்கிரீட்டை கொட்டி சாலை அமைத்து உள்ளனர். இதுபோலவே இத்திட்டம் பல்வேறு விதிமீறலுடன் நிறைவேற்றப்படலாம். இதன்மூலம் நெம்மேலி உப்பங்கழி நிர்மூலம் ஆக்கப்படும். எனவே காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளில் இருந்து காக்கும் இப்பகுதியின் தன்மையினை மாற்றி நீர் தேக்கம் அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும். சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தினாலே திட்டமிடப்பட்ட இந்நீர்தேக்கத்தை விட அதிக நீரை சேமிக்கலாம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply