சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருநெல்வேலியில் நெல்லையப்பர் திருக்கோயிலில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பசியுடன் அன்னதானத்தில் உணவு உண்ண வந்தனர். அவர்களை குறிப்பிட்ட பகுதியில் நுழையவோ, உணவு உண்ணவோ மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.. ஆண்டு தோறும் ஜன 30ல் காந்தி நினைவு நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நாளை ஒட்டி இதுபோல் சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
தீண்டாமையினால் ஏற்கனவே தென்மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி அதன் பிடியில் இருந்து மீளாத நிலையிலேயே உள்ளது. பள்ளிகளில் தீண்டாமை குறித்த ஆய்வுகளில் 30% பள்ளிகளில் இன்னும் தீண்டாமை பாகுபாடுகள் தொடர்வதாக தெரிவிக்கிறது. பல்வேறு கிராமங்களில் இப்போது வரையில் இரட்டை குவளை, தீண்டாமை சுவர் உள்ளிட்ட நிலைமை தொடர்கதையாகவே உள்ளது. தீண்டாமை கொடுமை உள்ள கிராமங்களாக 24 பகுதிகள் இன்னும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமை பிரச்னை தொடர்பான வரலாறு மறக்க முடியாதது. 1982 ஜூன் மீனாட்சிபுரத்தில் ஆதிக்க சாதியினரால் 100 குடிசைகளுக்கு வைக்கப்பட்ட தீயில் 6 பட்டியலின மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். 2022ல் பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை, நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாதி பாகுபாட்டால் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்டது,2024 ஜூன் நெல்லையில் CPI(M) அலுவலகத்தில் காதல் ஜோடிகளுக்கு தஞ்சம் அளித்த நிலையில் சாதி பாகுபாடு காரணத்தால் அலுவலகம் சூறை, 2025 ஆகஸ்ட் கவின் என்பவர் ஆணவப்படுகொலை..இது போல் எண்ணற்ற நிகழ்வுகள் நினைவை விட்டு அகலாதது.
சமூக அமைப்பில் வேரூன்றிய இத்தகைய பாகுபாட்டை, மனிதகுல விரோத செயலை முறியடிக்கும் விதமாய் அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக சாதி மோதல்கள் இல்லாமல் சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்த நெல்லை மாவட்ட கிராமங்கள் வன்னிக்கோனேந்தல், முதுமொத்தன்மொழி, தெற்கு பாப்பான்குளம் தீண்டாமை கடைபிடிக்காத கிராமங்களாக தேர்வு செய்யப் பட்டு கடந்த ஆண்டு தமிழக அரசால் விருது வழங்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு பிரிவு 17ன் படி தீண்டாமை பெருங்குற்றமாக கருதும் நிலையில் சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டிய நிகழ்வில் பிரிவினைகளை/ தீண்டாமையினை கடைபிடிப்பது நிகழ்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையினை வலியுறுத்த வேண்டியவர்கள் சமூகநீதிக்கு புறம்பாகவும், தீண்டாமை தீயினை அணையாமல் பாதுகாப்பதாகவும் செயல்படுவது மக்கள் ஒற்றுமைக்கும், சமூக அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பவர்களாகவே கருத வேண்டி உள்ளது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி சொல்லில் நில்லாது செயலில் வெளிப்பட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply