சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நீண்ட மலைத்தொடராகும். குஜராத்தின் தென் பகுதியிலிருந்து தொடங்கி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரந்து விரிந்து உள்ளது. இமயமலைத் தொடரை விடவும் பழமையான மலைத்தொடராகக் கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலைகள்
மனிதர்களுக்கும் பல்வேறு உயிரினங்களுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இந்த மலைத்தொடர், இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் பரவி உள்ளது. இம்மாநிலங்களுக்கு முக்கியமான நீர் ஆதாரத்தை வழங்கும் பல நதிகளின் பிறப்பிடமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைகளே திகழ்கின்றன.
தமிழ்நாட்டின் ஜீவநதியான காவிரி, இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான நதியான கோதாவரி, தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, கேரளாவின் மிக நீளமான நதியான பெரியாறு, மங்களூரு நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமான நெத்ராவதி, கோவாவின் முக்கிய நதியான மாண்டவி, வருசநாடு மலைத்தொடரில் உற்பத்தியாகும் வைப்பாறு உள்ளிட்ட கிருஷ்ணா, துங்கபத்ரா, பாரதப்புழா, சூரல், பம்பா போன்ற பல நதிகளும் இம்மலைத்தொடரிலேயே தோன்றுகின்றன.
இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவநதிகளை உருவாக்கும் சேலைக்காடுகளை போர்த்தி கொண்டு உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.இயற்கை வளங்களையும் உயிரினங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் வழங்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள், தற்போது ‘குறிப்பிடத்தக்க கவலைக்குரிய நிலை’ (Significant Concern) என்ற அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக, உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம், கட்டுப்பாடற்ற சுற்றுலா, குப்பைகள் சேர்தல், வெளிநாட்டு தாவர இனங்களின் ஆக்கிரமிப்பு, சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, கனிம சுரங்கங்களுக்கான அகழ்வு ஆகியவை இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. மேலும், நீர்மின் திட்டங்களை செயல்படுத்துதல், வணிகப் பயிர்கள் வளர்ப்பதற்காக இயற்கை காடுகளை அழித்தல், பசுமை மாறா காடுகளின் பரப்பளவை குறைத்தல் ஆகியவை கடுமையான அச்சுறுத்தல்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கஸ்தூரி ரங்கன் குழு (2013) பரிந்துரையின் படி சுமார் 56,800 சதுரகி.மீ பரப்பளவு சூழலியல் உணர்திறன் பகுதியாக தெரிவித்து உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைகளை உயிர்ப்பித்து பாதுகாக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் தென் இந்தியா பாலைவனமாகும் அபாயத்தில் உள்ளது. எனவே சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு தொடர்ச்சி மலையினை பாதுகாக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான முன்னெடுப்பினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள உறுதி ஏற்போம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply