சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான 100வது நாள் நிகழ்வில் மக்களின் அமைதியான போராட்டத்தின்போது 22.5.2018 அன்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் 23.5.2018 அன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 4 ஆண்டுகள் விசாரணை நடத்தி 18.5.2022 அன்று தமிழக முதல்வரிடம் அறிக்கையினை அளித்தது. கடந்த 18.10.2022 அன்று சட்டபேரவையில் குறிப்பிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட அறிக்கை போலீசார் எச்சரிக்கை, டியர் கேஸ், லத்தி சார்ஜ், எச்சரிக்கை சுட்டு எதுவும் செய்யாமல் வரம்பை மீறி செயல்பட்டதாகவும் அப்பாவி மக்கள் மீது அத்துமீறி நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் எனவும் குற்றம் சாட்டியது. மேலும் குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்பு உடைய 17 காவல் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 2 வருவாய் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 50 லட்சம் (ஏற்கனவே கொடுத்த 20 லட்சத்துடன்) காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணததொகை வழங்கிட வேண்டும். போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஆணையம் வலியுறுத்தியது. ஆனால் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் மீது இன்று வரையில் குற்றவியல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. துறைரீதியான நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்புக்காக சிலர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் குற்றவாளியாய் கருதப்படும் அன்றைய ஐ.ஜி சைலேஷ்குமார் உட்பட சில காவல்துறை உயர் அதிகாரிகள் டி.ஜி.பி வரை பதவி உயர்வு பெற்று பலனை அநுபவித்தனர். குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஓய்வூதியம் உள்ளிட்டவை பெற்று வருகின்றனர். போராடிய மக்களுக்கு துப்பாக்கி சூடு, பொய் வழக்கு பரிசு. மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு மக்களை கொலை செய்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பரிசு என கடந்த ஆட்சிகாலத்தில் நிகழ்ந்தது.
நீதிபதி.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையினை கிணற்றில் போட்ட கல் போல கிடப்பில் போட்டதால் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து மே 22 அன்று 8 ஆண்டுகள் ஆனபோதும் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையே நிரந்தரமாய் உள்ளது. எனவே பாதிப்பிற்கு உள்ளான மக்கள் அதில்இருந்து மீளும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையினை முற்றிலுமாய் தூத்துக்குடியில் இருந்து அகற்றுவதோடு கொலைகார வேதாந்தா நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் அரசு சார்பில் தூத்துக்குடியில் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும். மே 22 தினத்தினை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஆணைய பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply