சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு மாவட்டத்தின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதிலும், வாழ்வாதாரத்திலும் ரப்பர் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் அதிக நெகிழ்வு தன்மை கொண்டதால் இது உலகத்தரம் வாய்ந்தததாக கருதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் ரப்பர் பால், ஷூட், ஒட்டுப்பால் என பல்வேறு வடிவங்களில் இங்கிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு டயர் உள்ளிட்ட பல்வேறு பொருள் உற்பத்திக்கு என அனுப்பபடுகிறது..
மாவட்டத்தில் ரப்பர் உற்பத்தி கணிசமாக இருப்பினும் அதனை மூலப்பொருளாக கொண்டு இதுவரை ஆலைகள் அமைக்கப்படவில்லை. எனவே இதனை செயல்படுத்திடும் நோக்கில் கடந்த 1989ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி நாகர்கோவில் எஸ்.எல்.பி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செண்பகராமன்புதூர் பகுதியில் ரூ 400 கோடி செலவில் கனரக ரப்பர் ஆலை அமைப்பதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து மத்திய அரசு மற்றும் இந்திய ரப்பர் வாரியத்தின் பங்களிப்புடன் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் கீழ் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என 2005ல் தமிழக அரசு அறிவித்தது.
இருப்பினும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இத் திட்டத்தினை செயல்படுத்துவோம் என தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தவறாமல் வாக்குறுதி அளித்து வந்தனர். இந்நிலையில் செண்பகராமன் புதூர் ரப்பர் பூங்கா அமைக்கும் திட்டம் அரசால் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கென கையகப்படுத்தப்பட்ட பல ஏக்கர் நிலம் தனிநபரின் பயன்பாட்டில் தற்போது உள்ளது.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட திட்டம் குறித்தோ, கையகபடுத்தப்பட்ட நிலம் குறித்தோ எந்த வித உண்மைகளையும் வெளிப்படுத்தாமல் மூடி மறைக்க முயல்கிறது.
இச்சூழலில் குமரி மாவட்டத்திற்கு வந்த வனத்துறை அமைச்சர் ராஜ.கண்ணப்பனிடம் ரப்பர் பூங்கா அமைக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய பதிலை தெரிவிக்காமல் மாவட்ட மக்கள் மனதை புண்படும் வகையில் மழுப்பலாகவும், அலட்சியமாகவும் அமைச்சர் பதில் தெரிவித்து உள்ளார். இச்செயல் ஏற்கனவே திட்டத்தினை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கும், நிலம் அபகரிக்கப்பட்டு ஏமாற்றத்தில் தவித்தவர்களுக்கும் வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. பொறுப்பான அமைச்சரின் பொறுப்பற்ற இத்தகைய நடவடிக்கையினை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏற்கனவே குமரி மாவட்டம் பலவகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் காலங்களில் மட்டுமே மாவட்ட மக்கள் ஆட்சியாளர்கள் நினைவுக்கு வந்து செல்வர். அடுத்து வரும் ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்தினை நிறைவேற்றுவோம் என கூறுபவர்கள் கடந்த 36 ஆண்டுகாலமாக இத்திட்டத்தினை கண்டு கொள்ளாதது ஏன்? என்பதற்கான பதிலை உரியவர்களிடம் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர். பதில் அளிப்பார்களா?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply