சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

விதிகளுக்கு விரோதமாய் கல்குவாரிகள் – பாலைவனமாகி வரும் தமிழகம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சுற்றுச்சூழலை பாதிக்கும் சட்டவிரோத கல்குவாரி செயல்பாடுகள்

தமிழக அளவில் 2044 கல்குவாரிகளுக்கு சுமார் 3907 ஹெக்டேர் பரப்பளவில்அரசால் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குத்தகை காலம் முடிந்த பின்னரும் இத்தகைய குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 குவாரிகள் சட்டவிரோதமாக செயல் பட்டு வருவதாகவும் இதன்மூலம் 63 லட்சம் கன மீட்டர் அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. இத்தகைய சட்டவிரோத கல்குவாரிகளால் தமிழகத்தில் கனிமவளங்கள் சூறையாடப்பட்டு வருவதால் வெகுவேகமாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் அடைந்து வருகிறது.

2022 அரசு அறிக்கையின்படி நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 54 கல்குவாரிகளில் 53 சட்டவிரோதமாக செயல்பட்டதாக கண்டறியப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமான அளவில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளான இருக்கன் துறை, வடக்கன்குளம், சங்கனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் ஒரே பகுதியில் 20க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த நவம்பர் 2ந்தேதி கல்குவாரியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நெல்லையில் நடந்தது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் புகுந்த கல்குவாரி ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்கினர். அந்தவகையில் இக்கல்குவாரிகளின் பின்புலத்தில் செயல்படும் அதிகார வர்க்கத்தினரையும், உடந்தையாக உள்ள ஆட்சியாளர்களையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மதுரை உயர்நீதிமன்றம் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்த வழக்கில் சட்டவிரோதத்தில் ஈடுபடுவோரிடம் அபராதம் மட்டுமே வசூலிப்பதாகவும், மேலதிக நடவடிக்கை எதுவும் இல்லை என குற்றசாட்டு எழுப்பி உள்ளது. இருந்தும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் உள்ளதை கடந்த கால செயல்பாடுகள் வெளிச்சபடுத்தி உள்ளது.

இத்தகைய சட்டவிரோத கல்குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஒருபுறம் இருக்க கிரஷர் எந்திரங்கள் எழுப்பும் கடும் சத்தம், கனரக வாகனங்களின் புழுதியால் காற்று மாசு காரணமாக சுவாச பிரச்னைகள் மக்களுக்கு ஏற்படுவதோடு பயிர்களில் புழுதி படிவதால் மகரந்தசேர்க்கை தடைபட்டு விவசாயம் பாதிக்கபடுகிறது. 100 அடிக்கும் மேலாக நிலம் தோண்டப்படுவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதால் மழைநீர் ஊடுருவல் குறைந்து நீர்நிலைகள் வறண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட காரணமாகிறது. மலைகள் அழிக்கப்படுவதால் நில அமைப்பு மாறுவதோடு பள்ளங்கள், செயற்கை ஏரிகள் உருவாகிறது. மரங்கள் அழிவு, சுற்றுசூழல் மாசு காரணமாக காலநிலை மாற்றத்திற்கு இவை கால்கோள் விழா நடத்துகிறது.

மண் அரிப்பு அதிகரித்து வளமான மண் இழப்புக்கு காரணமாகிறது. விலங்குகள், பறவைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதோடு உயிர்பன்மை முற்றிலுமாய் சீர்குலைகிறது. பல்வேறு வகைகளிலும் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்திய போதும் இதில் புரளும் கோடிகணக்கான பணத்தால் மலை விழுங்கி மகாதேவன்கள் தமிழகத்தை தாரை வார்க்க துடிக்கின்றனர். இதற்கு சாதகமாக 5 ஆண்டுகளாக இருந்த அனுமதி காலத்தை அரசு 25 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்து உள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிப்பதின் மூலம் நமக்கு நாமே புதைகுழி வெட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

சட்டவிரோத கல்குவாரிகள்: இயற்கை வளங்களை இழக்கும் தமிழகம்
மலைகளை விழுங்கும் கல்குவாரிகள் – சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல்
தமிழகத்தில் அதிகரிக்கும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள்
கல்குவாரிகளால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுகிறதா?
சுற்றுச்சூழல் அழிவிற்கு காரணமாகும் குவாரி தொழில்?
கனிம வள கொள்ளை: தமிழகத்தில் தொடரும் சர்ச்சை
மலைகள் மறையும் போது: குவாரிகளின் உண்மை முகம்
இயற்கை வளங்களை காக்க சட்டவிரோத கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத கல்குவாரிகள் செயல்பட்டு வருவதால் மலைகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *