சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பனைமரங்கள் அழிப்பால் அழிவின் விளிம்பில் காதல் சின்னமான அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை-

பனைமரங்களில் வாழும் காதல் சின்னமான அன்றில் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான காட்சி

சங்க இலக்கியங்களில் 58 க்கும் மேற்பட்ட பறவைகள் குறிப்பிடப்பட்டாலும் இணைபிரியா பண்புக்கு அன்றில் பறவைகளையே குறிப்பிடப்பட்டு உள்ளது. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, நளவெண்பா, ஐந்திணை உள்ளிட்டவற்றில் இடம்பெற்ற இப்பறவை Glossy Ibis (Plegadis Falcinellus) என்ற அறிவியல் பெயர் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத குணம் கொண்டது. ஒன்று இறந்தால் மற்றது உயிரை விட்டு விடும் இயல்பு கொண்டது. இதனால் உண்மையான காதல், இணை பிரியாத உறவுக்கு உவமையாக காதலில் சின்னமாக கருதப்படுகிறது.

இலக்கியத்தில் பறந்து திரிந்த அன்றில் பறவை இன்று காணாமல் போய் விட்டது. விவசாய ரசாயனங்கள், தொழிற்சாலை கழிவுகள், நீர்நிலைகளை மாசுபடுத்தி இவை உண்ணும் மீன், தவளை, நத்தை நீர் பூச்சிகளை நஞ்சாக்குகின்றன. ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள், குளங்கள் அழிவு, விவசாய நிலங்கள் அழிப்பு, வேட்டையாடுதல், கடற்கரை பகுதிகள் நகரமயமாக்கல், பனை மரங்கள் வெட்டப்படுவதால் கூடுகட்டும் இடங்கள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் இவை அழிவின் விளிம்பில் உள்ளன.

ஈரநில வாழ் பறவையான இவற்றின் பாதிப்புகளுக்கு வலசைப் பாதைகள் பாதிப்பு, காலநிலை மாற்றம், உயர் மின்கோபுரங்கள், ஒலி மாசுபாடு உள்ளிட்ட மனித செயல்பாடுகளும் முக்கியமாக உள்ளது. ஒரு பறவை இனம் அழிந்தால் அதைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு பலவீனம் அடையும். ஈரநிலங்களின் சுகாதார காவலர்கள் ஆன அன்றில் அழிவால் ஈரநிலங்களின் ஆரோக்கியம் மோசமடையும். ஈரநில உயிரினங்களின் பன்முகத்தன்மை பாதிக்கப்படும். சுற்று சூழல் சமநிலை கெடும். இவை இரை உண்ணும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நீர் மாசுபாடு, நோய்பரவல் அதிகரிக்கும்.

நமது வாழ்க்கை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக மறைந்து வரும் இப்பறவைகளால் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் இடம்பெற்ற காதல் சின்னமான அன்றில்கள் மறைந்தால் நம் சூழல், கலாச்சார தொடர்புகள் துண்டிக்கப்படும் நிலை உள்ளது. அவை வாழும் காலத்தில் பாதுகாக்க தவறினால் வருங்காலத்தில் அன்றில்களை புகைப்படத்தில் மட்டுமே பார்க்கும் அவலம் உள்ளது.

எனவே அன்றில் பறவைகளை அழியாமல் காக்க ஈரநிலங்களை பாதுகாப்பதோடு, பனைமரங்களை வெட்டாமல் இருக்கவும், மாசுபாட்டை குறைக்கவும், நீர்நிலைகள் அழியாமல் தடுக்கவும், விவசாய விளை நிலங்களில் ரசாயன பயன்பாடு தடையும் மேற்கொண்டால் மட்டுமே இந்த இணைபிரியாப் பறவைகள் இறப்பை தடுக்க முடியும். நமது சுற்றுசூழலோடு நெருங்கிய அழகிய பறவை அழிவிற்கு நாமும் காரணமாய் இருக்கலாமா?

தமிழ்நாடு சுற்றுச்சூழல் செய்திகள்
அழிந்து வரும் பறவை இனங்கள்
ஈரநில பாதுகாப்பு கட்டுரைகள்
பனைமர பாதுகாப்பு விழிப்புணர்வு
பனைமர அழிவால் மறைந்து வரும் அன்றில் பறவைகள் – சமூக பொதுநல இயக்கம் கவலை. environmental awareness tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *