சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி சமூக பொதுநல இயக்கம்

சுற்றுச்சூழல் மனிதர்களால் பெருமளவில் அழிப்பது மற்றும் தீவிரமாக சேதப்படுத்துவது சூழலியல் படுகொலை (Ecocide) என அழைக்கப்படுகிறது. இயற்கையினை அலட்சியப் போக்குடனும், சுயநலத்திற்காகவும் அழிப்பது நீர்,நிலம், காற்று உள்ளிட்டவற்றை நிரந்தரமாக பாதிப்பிற்கு உள்ளாக்குவதோடு மீளமுடியாத நிலையினையே ஏற்படுத்துகின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம், உணவு, குடிநீர், காலநிலை, விவசாயம் அடியோடு பாதிப்பிற்கு உள்ளாகிறது. மேலும் வறட்சி, பஞ்சம், நோய்கள், இடப்பெயர்வு உள்ளிட்ட எண்ணற்ற விளைவுகளையும் ஏற்படுத்துவதால் இனப் படுகொலை யினை விட இயற்கைபடுகொலை மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது.

பல உயிரினங்களையும் எதிர்கால மனித குலத்தையும் அழிக்கும் செயல் என்பதால் சூழல் படுகொலையினை ஐந்தாவது சர்வதேசக் குற்றமாக ICC (international Criminal Court) இணைக்க ரோம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கையினை பாதுகாத்திடும் நோக்கத்தில் அதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு என பெல்ஜியம், ரஷ்யா, பிரான்ஸ், உக்ரைன் உள்ளிட்ட 11 நாடுகள் தனிச்சட்டம் இயற்றி உள்ளன. ஆனால் இந்தியாவில் இதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெரிய அளவிலான வனஅழிப்பு, நீர், மண், காற்று மாசு காரணமாக பல்லுயிர் இழப்பு மற்றும் நீண்டகால சேதமும் நிலை பெற்று உள்ளன.

தமிழ்நாட்டில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறை இல்லாமலும் அலட்சியப் போக்குடனும் செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றோம். காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி என அத்தனை நீர்நிலைகளையும் கழிவுநீர் மற்றும் குப்பை கால்வாய் ஆக மாற்றி விட்டோம். பல நீர்நிலைகளும் அதன் அடையாளம் தெரியாத வகையில் ஆக்கிரமிக்கப்பட்டு அந்திம காலத்தை எதிர்நோக்கி உள்ளன. பல்வேறு தொழிற்சாலைகளின் வடிகாலாக நதிகள் மாறிய சூழலில் அவை ஜீவனை இழந்து மரண விளிம்பில் உள்ளன. கூவம், நொய்யல் என பல ஆறுகளும் தங்கள் முகங்களை இழந்து முகவரியினை தேடி வருகின்றன.

கட்டுப்பாடற்று மேற்கொள்ளப்படும் கனிமவளக் கொள்ளையினால் மலைகள் இருந்த இடங்கள் பள்ளத்தாக்குகளாக காட்சி அளிக்கின்றன. மலைக்கள்ளர்களின் அகோரப்பசிக்கு இயற்கை மட்டுமா இரையாகிப்போனது நமது எதிர்காலமும் அல்லவா கபளீகரம் செய்யப்படுகிறது.? வனங்கள் அழிந்து நீர்வளம் சரிந்து விவசாயம் தொலைந்து நிர்மூலமாய் நிற்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம். ஒருசிலரின் பொருளாதார லாபத்திற்காக தமிழகம் வேட்டைக்காடாக மாறியதால் நிரந்தரமாக சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உள்ளாகி பரிதவித்து வருகின்றோம். எல்லை இல்லாமல் நடைபெறும் இத்தகைய சுற்றுச்சூழல் குற்றங்கள் எவ்வித குற்ற உணர்வும் இன்றி அரங்கேறி வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்த்திடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, நீர் மாசு தடுப்புச் சட்டம் 1974, காற்று மாசு தடுப்புச்சட்டம் 1981 என்பவை பெயர் அளவிலேயே அட்டைக்கத்திகளாக உள்ளன. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளுக்கும் போதிய மனிதவளம், நிதி மற்றும் அதிகாரம் இல்லை. மேலும் இவைதொடர்பான செயல்பாடுகளுக்கு தற்போது அபராதங்கள் மட்டுமே விதிக்கப்படுகின்றன. எனவே தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதியும், வள கொள்ளையினை தடுக்கும் வகையிலும் சூழல் படுகொலையினை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.இதன்மூலம் சுற்றுச்சூழல் நீதி நிலைநாட்ட முடியும் என்பதோடு நமது இயற்கை வளங்களையும் காப்பாற்ற இயலும்.

சுற்றுச்சூழல் படுகொலைக்கு தமிழகத்தில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம்
Ecocide சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா? – சமூக பொதுநல இயக்கம் கோரிக்கை
இயற்கை வள அழிவை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்
வளக் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழல் அழிவுக்கு கடுமையான சட்டம் தேவை
தமிழகம் வேட்டைக்காடாக மாறுகிறதா? – Ecocide சட்டம் குறித்து வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் நீதி நிலைநாட்ட Ecocide சட்டம் அவசியம்
வன அழிப்பு, மாசுபாடு, வளக் கொள்ளை – தமிழகத்தில் புதிய சட்டம் தேவை
Ecocide குற்றத்தை தடுக்கும் சட்டம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்குமா?
இயற்கையை காக்க தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலை தடுப்பு சட்டம் வேண்டும்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு புதிய சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *