சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகம் 2008ல் ரூ 96 கோடியில் கட்டப்பட்டு கடந்த 2016ல் திறக்கப்பட்டது. இத்துறைமுகம் கட்டப்பட்டபோது 60 விசைப்படகுகள் நிறுத்தும் வகையில் மட்டுமே வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சுமார் 1300 நாட்டு படகுகளும் இங்கு செயல்படுத்தப்படும் நிலையில் 50 ஆயிரம் பேர் இத்துறைமுகம் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக பயன்படுவதால் இத்துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில் இங்கு படகு கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் யார்டு இல்லாததால் மீனவர்கள் தங்கள் படகுகளை முட்டம் அல்லது தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 150 முதல் 450 கி.மீ கடந்து கேரளாவின் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் செயல்படும் யார்டு களுக்கும் மீனவர்கள் தங்கள் படகுகளை கொண்டு செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. இதனால் எரிபொருள் விரயம், பொருள் செலவு, நேர இழப்பு ஏற்படுவதால் மீனவர்கள் மிகுந்த அலைக்கழிப்புக்கும், சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலங்களில் (ஏப்ரல்-ஜூன்) வேளைகளில் இவர்கள் பெரும் வேதனைகளை சந்தித்து வருகின்றனர்.
எனவே குளச்சலில் படகு கட்டும் ஆலை அமைத்தால் பழுதுபார்ப்பு மற்றும் புதிய படகுகள் கட்டுதல் எளிதாகும். படகு உரிமையாளர்களின் செலவை குறைப்பதாகவும் அமையும். மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். புதிய தொழில்நுட்பத்துடன் படகுகள் உருவாக்கவும், வருமான இழப்பை தடுக்கவும் வழி ஏற்படுத்தும் என்பதால் குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்திட இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க குளச்சலில் மீன்பிடி படகுத் தொழிற்சாலை தொடங்க உரிய முயற்சிகள் மேற்கொள்வதாக உறுதி அளித்து இருந்தது. ஆனால் இதுவரையில் இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் துன்பங்களை சந்தித்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. துறைமுக விரிவாக்கப்பணிக்கென கடந்த 2022ல் ஆய்வு நடத்தப்பட்டு தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்டது. இருந்தும் இதன்படி உள்கட்டமைப்பு உருவாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குளச்சலில் படகு கட்டும் ஆலை அமைந்தால் மீனவர்கள் தினமும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும். அவர்களது வாழ்வாதாரம் மேம்படவும், வருமான இழப்பை தவிர்க்கவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், இப்பகுதி வளர்ச்சி அடையவும் இத்திட்டம் அவசியமானது. கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களின் துயரை துடைக்க அரசு நடவடிக்கை எடுப்பது எப்போது?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply