ஆரல்வாய்மொழி பொய்கை மலை அடிவாரப் பகுதியில் பொய்கை அணை கட்டப்பட்டு கடந்த 2000ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அணையின் மொத்த நீளம் 1202 மீட்டர் ஆகும். அணையில் இருந்து ஆற்று மதகு, கால்வாய் மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆற்று மதகு மூலம் கரும்பாட்டுகுளம் தோவாளை பெரியகுளம், பொய்கைகுளம், குட்டிகுளம், ஆரல்வாய்மொழி பெரியகுளம், வைகைகுளம், கிருஷ்ணன் குளம், செண்பகராமன்புதூர் பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கால்வாய் மதகு மூலம் கீழ பாலார்குளம், பழவூர் பெரியகுளம், அன்னுவத்தி குளம்,லெட்சுமி புதுக்குளம், அத்திகுளம், சாலை புதுகுளம், தெற்கு சிவகங்கை குளம், மேல பாலார்குளம் ஆகிய குளங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது.பொய்கை அணை மூலம் 1357 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக சுங்கான் ஓடை, இரப்பையாறு உள்ள நிலையில் இவற்றில் ஏற்பட்ட தடைகள் காரணமாக இந்நீர் கடுக்கரை பகுதியில் பழையாற்றில் கலக்கிறது. இதனால் இந்த அணை கட்டப்பட்டு இதுவரையில் 2021 ல் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளது.
ஆரல்வாய்மொழி ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் பகுதி என்பதாலும், மலைகள் சூழ்ந்த மழைமறைவு பகுதியாகவும் காணப்படுவதால் குமரி மாவட்டத்தில் பருவமழை காலங்களில் கூட இப்பகுதியில் பெய்யும் மழையின் அளவு குறைவானதாகவே இருக்கும். மாவட்டத்தில் ஏனைய பகுதிகளைப்போல் இதன் சுற்றுவட்டார பகுதியில் ஆற்றுநீர் பாசனம் இல்லாமல் மழைநீர் நம்பியே பாசன குளங்களும், விவசாய விளைநிலங்களும், நீர் ஆதாரங்களும் உள்ளன. இதனை கருத்தில் கொண்டே இப்பகுதியில் பொய்கை அணை கட்டப்பட்ட நிலையிலும் அதனால் முழுமையான பயன் கிட்டாததால் இது பொய் அணையாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள பாசன குளங்கள் போதிய அளவில் நீர் நிரம்பாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோலவே இப்பகுதி மக்களின் நீர் தேவையை ஆழ்குழாய் கிணறுகளே பூர்த்தி செய்துவரும் நிலையில் உரிய நீர் ஆதாரம் இன்றி இவை உவர்நீராக மாறி உள்ளது. இத்தகைய நிலையினை போக்கிடும் வகையில் செண்பகராமன்புதூர் பகுதியில் இருந்து மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதி வழியாக சுமார்2கி.மீ தூரத்திற்கு இணைப்பு கால்வாய் அமைத்து தோவாளை கால்வாயினை பொய்கை கால்வாயில் இணைக்கும் வகையில் இணைப்பு கால்வாய் ஏற்படுத்திடவேண்டும். இதன்மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்பதால் இத்திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம் Tஜெகதீஷ், குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் E.சுரேஷ், விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், தோவாளை ஒன்றிய செயலாளர்
Y.ராகுல், செண்பகராமன்புதூர் பகுதி செயலாளர் R.சிவகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் D.சகாய பிரிட்டோ, அமைப்புச் செயலாளர் S.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply