சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தென்தமிழகப்பகுதியில் கடந்த 1990களில் நடைபெற்ற ஜாதி மோதலைத் தொடர்ந்து ஆராய நீதிபதி.ரத்னவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஜாதி ரீதியான மோதல்கள் தீரும் என தெரிவித்தது. இதன் அடிப்படையில் கடந்த 2001ல் நான்குனேரியில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி மூலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான (உயர் தொழில்நுட்ப பூங்கா) அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்திற்கென 2518 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்படவே திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2006 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில் இத்திட்டத்தினை செயல்படுத்திட முயன்றது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) ஏ.எம்.ஆர்.எப் ஹைடெக் சிட்டி நிறுவனத்துடன் இணைந்து 2008ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் பின் 2011-2021 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில் மீண்டும் குறிப்பிட்ட திட்டத்திற்கு உயிர் ஊட்டப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் மருந்து பூங்கா அமைக்க தமிழக அரசு முயற்சி செய்தது. 6000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனவும் 500 கோடி மதிப்பில் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. கடந்த 7.2.2025 அன்று முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நான்குனேரியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் சிறப்பு பொருளாதார மண்டலத்திட்டம் கேள்விக்குறியானது.
கடந்த 24 ஆண்டுகளில் வெறும் 14 சிறு தொழிற்சாலைகள் மட்டுமே இங்கு செயல்படும் நிலையில் அதன்மூலம் சிலருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ள சூழலில் ரூ 792 கோடி அளவில் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் தோல்வியைத் தழுவி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொழில்நுட்ப பூங்காக்கள் வெற்றிகரமாக செயல்பட்டபோதும் நான்குனேரி தொழிற்பூங்கா உள்கட்டமைப்பு வசதி இல்லாமை, ஆட்சி மாற்றங்கள், நிர்வாக சீர்கேடுகளின் காரணமாக இத்திட்டம் முடங்கிப்போனது.
குறிப்பாக தமிழக அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஏ.எம்.ஆர்.எல் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கென ஒதுக்கப்பட்ட ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை கொல்கத்தாவைச் சேர்ந்த நிதிநிறுவனத்திடம் அடமானம் வைத்து ரூ 855 கோடி கடன் பெற்று உள்ளது. இருப்பினும் தொழிற்பூங்கா மேம்பாட்டிற்கு என எதுவும் செய்யவில்லை. இதுபோல் பூங்காவில் செயல்படும் நிறுவனங்களுக்காக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டவேண்டிய தொகை கட்டாததால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் சாலை, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் அலட்சியப் போக்குடன் இருந்தது தெரியவந்து உள்ளது. இது தொழில்முனைவோர் செயல்பட பெரும் தடையாக இருந்து உள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படுத்தாத போதிலும் தமிழக அரசின் புதிய அறிவிப்பான சிப்காட் திட்டம் மூலம் தொழில் வளர்ச்சி அடைந்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடையும். பல்வேறு தடங்கல்களால் முடங்கி கிடக்கும் தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமான இத்திட்டத்தினை தமிழக அரசு நிறைவேற்றிடும் வகையில் முன்னுரிமை அளித்து சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு உரிய கடன் உதவிகளும், இப்பகுதியில் தொழில்புரிவோருக்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply