சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வடமங்கலம் அருகே சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அரசு அனுமதி காலம் முடிந்தபின்பும் கடந்த 3 ஆண்டுகாலமாக சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரி 24.5.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குவாரி விதிமுறைகளை முழுமையாக மீறி 2000 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு உள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி கல்குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வினை ஒட்டி இம்முறைகேடு தெரியவந்த நிலையில் கனிமவளக் கடத்தலில் தொடர்புடைய மலை விழுங்கி மாஃபியாக்கள் தலைமறைவாகி உள்ளனர். கடத்தலில் தொடர்பு உடைய 5 லாரிகள் மட்டுமே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட கல்குவாரி ஆழமாக தோண்டப்பட்டு உள்ளதால் இதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்து உள்ளது. நில அமைப்பு சிதைவால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டு உள்ளதோடு விவசாயம் அடியோடு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. வெடி வெடிப்பு, லாரி போக்குவரத்து காரணமாக தூசு, சல்பர் புகை பரவுவதால் அவை பயிர்களில் படிந்து விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஒலி மற்றும் அதிர்வு காரணமாக வீடுகள் பழுதடைந்து உள்ளதோடு இப்பகுதி மக்கள் சுவாச மற்றும் செவி பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீர் மாசு ஏற்படுவதோடு விவசாய நிலங்கள் மலட்டு நிலமாக மாறிவருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பாதுகாப்பற்ற இக்கல் குவாரி மூலம் கிராம மக்கள் மற்றும் கால்நடைகளள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளதோடு பல்லுயிர் இழப்பிற்கும் அரசுக்கு வருவாய் இழப்பிற்கும் காரணமாகிறது. இயற்கை வாழிடங்கள் அழிந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டதால் இதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாகவே உள்ளது. எனவே இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்து உரிய மீட்டெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் மற்றும் விலங்குகள் தவறி விழுவதை தடுக்க பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட கல்குவாரி மூலம் நிலச்சரிவு மற்றும் நிலஅதிர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்துவதோடு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மலை விழுங்கி மாஃபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிககள், குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் விதத்தில் இப்பகுதியின் நிலம், நீர் மற்றும் காற்றின் தரம் பரிசோதிக்கப்படுவதோடு அதனை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கனிமவளத்துறை அதிகாரிகள் கண்ணில் இதுவரை படாமல் இப்போதுதான் சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லை. கடத்தல் பேர்வழிகளுக்கு உடந்தையாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது அவசியம். குற்றங்களுக்கு ஆதரவாய் இருப்பவர்களும் குற்றவாளிகளே என்பதை மனதில் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் தொடர்வதில் இருந்து தடுக்க முடியும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் சாட்டிலைட் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பதோடு விதிமீறல்களை களைய வேண்டும். அனுமதிக்கப்பட்ட குவாரிகள் பற்றிய விபரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்கவேண்டும். அரசு இவ்விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

ஸ்ரீபெரும்புதூரில் சட்டவிரோத கல்குவாரி: யார் பொறுப்பு?
3 ஆண்டுகள் இயங்கிய சட்டவிரோத கல்குவாரி வெளிச்சம்
கல்குவாரி மாஃபியாவுக்கு உடந்தையானவர்கள் கைது செய்யப்படுமா?
ஸ்ரீபெரும்புதூர் கல்குவாரி முறைகேடு: விவசாயிகள் பாதிப்பு
சுற்றுச்சூழலை சீரழித்த சட்டவிரோத கல்குவாரி மீது நடவடிக்கை தேவை
கனிமவள கொள்ளையை தடுக்க அரசு விரைந்து செயல்படுமா?
ஸ்ரீபெரும்புதூர் குவாரி விவகாரம்: அதிகாரிகளின் பங்கு விசாரிக்கப்படுமா?
தமிழகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
நிலத்தடி நீர் பாதுகாப்பின் அவசியம்
விவசாய நிலங்கள் மற்றும் சுரங்கத் தொழில்
கனிமவள கொள்ளை தொடர்பான செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *