சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தத்தை நினைவுகூறும் வரலாற்று காட்சி

கடந்த 1752ல் மதுரைப்பகுதி ஆற்காடு நவாப் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்கள் வரிவசூலிக்க படைகளை அனுப்புவது வழக்கம். ஆங்கில படைத்தளபதி கர்னல். அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமையிலான படை முக்குலத்தோருக்கு சொந்தமான திருமோகூர் கோவில் பித்தளைச் சிலைகளை கொள்ளை அடித்துச் சென்றது. பின்னர் திருநெல்வேலி பகுதியில் பூலித்தேவர் போன்ற பாளையக்காரர்களிடம் வரிவசூல் தோல்வியடைந்த நிலையில் அந்த படை திருச்சிக்கு திரும்பியது. சுமார் 1000 சிப்பாய்கள் 29.5.1755 ல் திண்டுக்கல் மாவட்டம் மலைகள் சூழ்ந்த நத்தம் கணவாய் வழியாக சென்றனர்.

அவர்களை குழு குழுவாக சென்று முக்குலத்தோர் படை நீண்ட வேல், கம்புகள், அம்புகள், கத்திகளைக் கொண்டு பதுங்கி தாக்கியதில் 970 பேர் கொல்லப்பட்டனர். எஞ்சிய உயிர் தப்பியவர்கள் திருச்சிக்கு சென்றனர். ஆங்கிலேயர்கள் கடத்தி சென்ற தங்கள் குலதெய்வ சிலைகளை மீட்டனர். இது பிளாசிப் போருக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்ட முதல் பெரிய உயிர் இழப்பு இந்த பேரின் மூலம் நடந்தது. இதனால் சுதந்திர வரலாற்றில் மிக முக்கிய போராட்ட நிகழ்வாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

இந்த யுத்தம் குறித்து எழுதிய ஆங்கிலேய கேப்டன் ஜோசப் ஸ்மித் தனது பதிவில் இந்த போரில் நத்தம் கணவாய் ரத்த கால்வாயாக மாறி இருந்ததாக குறிப்பிடுகிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து போர்வீரர்கள் மற்றும் பாதுகாவலர்களாக இருந்த முக்குலத்தோர் சமூகத்தை குற்றப்பரம்பரையாக பிரிட்டீஷ் அரசு அறிவித்தது. இச்சம்பவத்தை நினைவு கூறும் விதமாய் மதுரை, திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் மே 29 அன்று வெற்றி நாளாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் விதமாய் இதுவரை எவ்வித போர் நினைவுச் சின்னங்கள் எதுவும் குறிப்பிட்ட பகுதியில் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக நினைவு சின்னம் தாங்களே அமைக்கிறோம் என குறிப்பிட்ட சமூகத்தினர் கேட்டுகொண்ட போதும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வரலாற்றை நினைவு கூறும் விதமாய் நினைவுச்சின்னம் அமைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குறிப்பிட்ட சம்பவம் வெறுமனே சிலைகளை மீட்பதற்காக நடத்தப்பட்ட யுத்தமாக மட்டும் பார்க்கக்கூடாது. அந்நிய ஆளுமைக்கு எதிரான முதல் போர் குரலாகவும், ஒற்றுமை உணர்வையும், வீர எழுச்சியையும், அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியாகவும் நாம் பார்க்க வேண்டும். தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய அடையாளமாக திகழும் இந்நிகழ்வினை நினைவு கூறும் விதத்திலும் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை வாழும் சமூகமும், வருங்கால சமூகமும் அறிந்து கொள்ளும் வகையில் இறந்தவர்கள் தியாகத்தை போற்றும் விதமாய் தமிழக அரசே குறிப்பிட்ட பகுதியில் நினைவு சின்னம் எழுப்புவதோடு குறிப்பிட்ட நாளில் நினைவுகூற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *