சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு 112கி.மீ தூரம் பயணித்து தமிழகத்தில் கொடியாளம் தடுப்பணை வழியாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இதன்மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன்பெற்று வருகிறது. குறிப்பிட்ட அணையில் நீர் இருந்தபோதிலும் அதனை பயன்படுத்த இயலாத நிலைக்கு இவ்விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். காரணம் அணையில் இருந்து நீர் திறந்து விட்டதும் வெண்மை நுரை பொங்கி ஆறே அடையாளம் தெரியாத வகையில் மேகக் கூட்டங்கள் போல் காட்சி அளிக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயனக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படாத நிலையில் குறிப்பிட்ட ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதுபோல் ஓசூர் மற்றும் பெங்களூரு நகரப்பகுதியின் கழிவுநீரும் இங்கு சங்கமிப்பதால் குறிப்பிட்ட ஆறு மாசுபட்டு பயன்படுத்த முடியாத வகையில் உருமாறிப்போனது. குறிப்பிட்ட நீரில் கனரக உலோகங்கள் கலப்பதால் அதனை குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில தொழிற்சாலைகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல தமிழகத்தில் செயல்படும் பல ஆலைகளும் தங்கள் பங்கிற்கு கழிவுநீரை ஆற்றில் விடுகின்றன. இதனால் இந்த ஆற்றை நம்பி உள்ளவர்கள் அடியோடு பாதிக்கப்படும் நிலையே உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயக்கப்பட்டால் செலவு அதிகம் ஆகும் என்பதால் சுயநல லாபவெறியில் ஆற்றை சூறையாடி வருகின்றனர். இருப்பினும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் பிரச்னை நீடித்து வருகிறது.
இப்பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் திறந்துவிடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலப்பகுதியில் உள்ள கழிவுநீர் ஆற்றில் கலப்பதை முழுமையாக தடைசெய்வதோடு போதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து அதனை செயல்படுத்படுத்திட வேண்டும். அனைத்து தொழிற் சாலைகளும் பூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்ற முறையினை கட்டாயம் பின்பற்ற சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அணையில் இருந்து நீர் வரும் பாதையில் குறிப்பிட்ட மாசினை உறிஞ்சும் தாவரங்களை நிறுவிட வேண்டும். தற்போது ரசாயானம் கலந்த நீரால் இதனை பயன்படுத்துவோருக்கு பலவித நோய்களும் உருவாகி வருகிறது. இதுபோல் விவசாய விளைநிலங்கள் மலடாகி வருகிறது. இதனை தடுத்திடும் நோக்கத்தில், தென்பெண்ணை ஆறு படுகொலை செய்யப்படும் சூழலில் அதனை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலன் காக்கவும் தமிழக அரசு போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply