சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யும் மத்திய அரசின் கல்வி ஆணைய மசோதா-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

உயர்கல்வி துறையை பாதிக்கும் கல்வி ஆணைய மசோதா குறித்து விவாதம்

விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 15 டிசம்பர் 2025ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இம்மசோதா கூட்டு நாடாளுமன்றக்குழுவுக்கு அனுப்பபட்டு உள்ளது. கடந்த 2018ல் உயர்கல்வி ஆணைய மசோதா என்ற பெயரில் அறிமுகபடுத்தியபோது அதற்கு எதிராக கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) என்னும் பெயரில் தனது திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு முயல்கிறது. இம்மசோதாவின் படி நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு(UGC) அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகம் (AlCTE) தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (NCTE) ஆகிய உயர்கல்விக்கான தன்னாட்சி அமைப்புகளை கலைக்கிறது.

உயர்கல்வித் துறையினை தேசிய உயர்கல்வி ஆணையம் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. வினியமன் பரிஷத் எனும் ஒழுங்குமுறைக்குழு, குணவத்தா பரிஷத் எனும் அங்கீகார குழு, மானக் பரிஷத் எனும் தரநிலைக்குழு ஆகிய 3 தன்னாட்சி அதிகாரங்களை கொண்ட குழுக்களை உருவாக்கி இதன்மூலம் உயர்கல்வித் துறையை தாங்களே ஆட்டுவிக்கும் வகையில் செயல்படுகிறது. கல்வி நிறுவன தரத்தை நிர்ணயிப்பதும் அதற்கு தேவையான நிதியை வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பள்ளி கல்வி நிதி முடக்கப்பட்டு உள்ளதை நாம் அறிவோம். இதுபோலவே பல்கலைகழக மானியக்குழுவை ஒழித்து உயர்கல்வி நிறுவனங்களின் கழுத்தை நெறிக்கும் விதமாய் நிதி அதிகாரம் மாற்றப்படுகிறது.

உயர்கல்வி நிதி முகமை (HEFA) எனும் அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டு உள்ள நிலையில் பல்கலைகழகங்களுக்கு இதுவரை வழங்கபட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டு எந்த தேவையாக இருப்பினும் இம்முகமையிடம் இருந்து கடனாக பெற்று செலுத்த வேண்டும். இதன்மூலம் திரும்ப செலுத்த வேண்டிய தொகைக்காக மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தவிர்க்க இயலாது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை ஏழை நாடுகளுக்கு கடன் கொடுக்கும் நோக்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதற்கு நிகரானதே இம்முகமையின் நோக்கம். கார்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு மாறும் சூழலில் கல்வி அடிப்படை உரிமை என்ற இடத்தில் இருந்து சந்தைப் பொருளாகும் என்பதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனி யாகிப்போகும்.

கல்வி நிறுவன பாடதிட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் கபளீகரம் செய்யப்படுவதால் பொதுப் பட்டியலில் உள்ள கல்வியின் மாநில அரசின் அதிகாரம் முற்றிலுமாய் பறிக்கப்படும். மசோதா பிரிவு. 33ன் படி பொறுப்பில் உள்ளவர்கள் பணிநீக்கம் செய்வது, கல்வி நிறுவன அங்கீகாரம் ரத்து செய்வது, ரூ 2 கோடி வரை அபராதம் விதிப்பது, பட்டங்கள் வழங்கும் அதிகாரம் நிறுத்தி வைப்பு உள்ளிட்டவற்றால் தங்கள் சித்தாந்தங்களை ஏற்காத நிறுவனங்களை ஒடுக்க முயல்கிறது. பிரிவு 45 மற்றும் 47 படி கருத்துவேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்கிறது. இதன் மூலம் தங்களது சித்தாந்தங்களை எவ்வித எதிர்ப்பும் இன்றி நிதி மற்றும் தண்டனை எனும் ஆயுதங்களால் மிரட்டி பணிய வைக்க முயல்கிறது.

மத்திய அரசின் இத்தகைய ஒரே நாடு- ஒரே கல்வி திட்டம் மூலம் மாநிலங்களின் தனித்துவம் அழிந்துபோவதோடு மாநில பல்கலைகழகங்களின் துணைவேந்தர் நியமனம், பாடதிட்டம், நிதி ஒதுக்கீடு என அனைத்திலும் மத்திய அரசின் தலையீட்டால் கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்படும். தேசிய கல்வி கொள்கையினை மாற்று வகையில் அமல்படுத்துவதின் மூலம் சமூக நீதி அழிக்கப்பட்டு குலக்கல்வி திட்டத்திற்கும், கல்வி கார்பரேட் நிறுவனங்களின் சந்தையாவதற்கும், தங்களது சித்தாந்தங்களை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. கல்வி கடை சரக்கல்ல.. நமது அடிப்படை உரிமை இதனை மீட்பது நமது கடமை. என்ன செய்யப் போகிறோம் நாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *