சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே தலக்குளம் பகுதியில் 6.5.1765 ல் பிறந்த வேலுத்தம்பி தளவாய் (இயற்பெயர் வேலாயுதன் செண்பகராமன் தம்பி) திருவிதாங்கூர் மன்னர் பாலராம வர்மா குலசேகரப்பெருமாள் ஆட்சியில் தலைமை அமைச்சர் மற்றும் படைத்தளபதியாக பதவி வகித்தார். பிரிட்டிஷ் ரெசிடெண்ட் கொலின் மெக்காலே திருவிதாங்கூரின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதிகப்படியான பணம் கோரினார். 1805 ஒப்பந்தத்தின்படி பிரிட்டிஷ் படைகளை பராமரிக்க அதிக வரி விதிக்கப்பட்டது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 28.12.1808ல் கொச்சியில் வைத்து தளபதி.வேலுத்தம்பி மெக்காலேவை கொலை செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இத் தோல்விக்குப் பின் வேலுத்தம்பி தளவாய் மக்களை திரட்டி 11.1.1809 அன்று கொல்லம் அருகே குந்தாரா என்னும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார். இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிரான முதல் பெரிய ஆயுதப்போராட்டமாக கருதப்படுகிறது. மேலும் கேரள வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகவும், இந்திய சுதந்திர போராட்டஎதிர்ப்பின் ஆரம்பகால விதையாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி 15.1.1809 அன்று நடைபெற்ற பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்த மிகப்பெரிய தாக்குதலும் தோல்வியில் முடிந்தது. இதன் பின் தனது பதவியை துறந்த வேலுத்தம்பி தளவாய் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மண்ணடி கோயில் அருகே 1809(மார்ச்) வாளால் தற்கொலை செய்து கொண்டார்.பிரிட்டிஷ் படைகள் அவரது உடலை கைப்பற்றி கழுவில் ஏற்றினர். அவரது குடும்பத்தினர் வேட்டையாடப் பட்டனர். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த புரட்சி தோல்வியில் முடிந்தாலும் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் எதிர்ப்பின் பொறியாகவும், கேரளாவின் சுதந்திர உணர்வை தூண்டியதாகவும் நினைவு கூறப்படுகிறது. வேலுத்தம்பி இறந்த இடத்தில் நினைவிடம், அருங்காட்சியகம், பூங்கா, தலைமை செயலகம் முன் சிலை அமைத்து கேரள அரசு பராமரித்து வருகிறது. குமரி மாவட்டம் தலக்குளத்தில் அவர் பிறந்த வீடு ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட பின்னர் மக்களின் கோரிக்கை ஏற்று அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று முற்றங்கள் கொண்ட எட்டுக்கட்டு இல்லம் பாரம்பரிய கேரளா பாணியில் திருவிதாங்கூர் மன்னரால் கட்டப்பட்டது. கடந்த 2008ல் அவரது திருஉருவச் சிலையும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதி தனியார் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் எவ்வித பராமரிப்பும் இன்றி, பாழடைந்த நிலையில் பரிதாபமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதி வாயில்கள் பூட்டப்பட்டு கிடப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையே உள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் ( 1760 – 1799) வேலுத்தம்பி தளவாய் (1765-1809) இருவரும் 18 மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடி இன்னுயிர் நீத்தவர்கள். தமிழ்-கேரள வரலாற்றில் சிறந்த போராட்ட வீரராக அடையாளம் காணப்பட்டவரின் நினைவு இடம் பொலிவினை இழந்து வருவது வருத்தம் தருவதாக உள்ளது. இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதும், அவர்களை நினைவு கூறுவதும் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதாகும். எனவே தமிழகத்தில் உள்ள இவ்வரலாற்று நினைவிடத்தை அரசு மீட்டு பழுதடைந்த சுவர்கள், மரவேலைப்பாடுகள், தரை சுற்றுவட்டார பகுதிகளை உள்ளிட்டவற்றை பழுதுபார்த்து பராமரிக்க வேண்டும்.
வேலுத்தம்பி தளவாய் வாழ்க்கை வரலாறு, திருவிதாங்கூர் சமஸ்தான வரலாறு, ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றை இங்கு காட்சிபடுத்துவதோடு வளரி உள்ளிட்ட ஆயுதங்கள், பனை ஓலை ஏடுகள்/ நாணயங்கள் போன்றவற்றை நினைவு இல்லத்தில் காட்சிபடுத்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இப்பகுதியில் இருந்து பத்மனாபபுரம் அரண்மனை வரையிலான ரகசிய சுரங்கபாதையினை ஆய்வு செய்து அதனை திறக்கப்படவேண்டும். தகவல் பலகை மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply