சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஊழலைத் தடுக்க தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட கோரிக்கை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 7 ன்படி பணியில் சேரும்போது 3 மாதத்திற்குள்ளும் அதன் பின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஓய்வு பெறும் முன் கடைசி 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கடன்கள், குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை அரசு ஊழியர்கள் துறைத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் ஜனவரி 31க்குள் இவ்விபரங்களை தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பதவி உயர்வுக்கு தடை உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளதால் மத்திய அரசுப்பணியாளர்கள் சரிவர இதனை கடைபிடித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விபரங்களை கேட்டு கொண்டபோதும் சரிவர அமல்படுத்தப்படாத நிலையே உள்ளது. உரிய கண்காணிப்பு மற்றும் தண்டனை இல்லாததுடன் நிர்வாகச் சுமை காரணமாக இது சரிவர நடைமுறைப்படுத்தப்படாத நிலையே உள்ளது. மத்தியப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அமைப்பு இல்லாமல் ஒவ்வொரு துறையும் தனித்தனியாக செயல்படுவதால் ஒருங்கிணைப்பு இல்லாத சூழலில் முழுமையாக செயல்படுத்த இயலாத நிலையே உள்ளது.

இது ஒருபுறமிருக்க அரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் இதுவரையில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக தமிழ்நாடு அரசு தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விபரம் கேட்டால் தகவல் அளிக்க மறுக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு தகவல் ஆணையம் தனிப்பட்ட விபரங்களை தெரிவிக்க இயலாது எனவும் கூறி வருகிறது. இதனால் இதுகுறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவே உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி C.V.கார்த்திகேயன் கடந்த 20.12.2024 அன்று ஒரு வழக்கில் ((W.P.No.33854/2024) பிறப்பித்த உத்தரவில் அரசுப்பணியில் சேர்பவர்கள் பொதுமக்கள் பார்வையில் வாழவேண்டும். அவர்களது சொத்து மற்றும் கடன் விபரங்கள் தனிப்பட்டவை அல்ல. பொதுநலன் சார்ந்தவை. அதனை மறைப்பது ஏற்றுகொள்வது அல்ல என உத்தரவு பிறப்பித்து உள்ளார். இருப்பினும் நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப் படாததுடன் தகவல் ஆணையமும் தகவல் தர மறுத்து வரும் நிலையே நீடித்து வருகிறது.

அரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் கேட்டுப் பெறுவதில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் கடுமையான முறையில் அமலாக்கம் செய்து வருகிறது. ஏனைய பல்வேறு மாநிலங்களிலும் இவ்விதிமுறை சரிவர கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுவெளியில் தெரிவிக்கப் படாததால் தகவல் உரிமைச் சட்டத்தின் படியோ, நீதிமன்றம் மூலமோ பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பீகார் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் கடந்த 2011 முதல் பொதுவெளியில் வெளியிடப்படுகிறது. தமிழகம் பல துறைகளில் முன்னோடியாக திகழும் நிலையில் ஊழலை ஒழிப்பதிலும் முன்னோடி மாநிலமாக திகழ அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை மக்களிடம் தெரிவிப்பதை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *