சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19 அன்று காவல் நிலையத்தில் கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாகி உயிர் இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்திய காவல் சித்ரவதை மரணமாகும். இவ்வழக்கில் மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி G.முத்துகுமரன் இக்குற்றத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு மரண தண்டனையும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இவர்கள் கூட்டாக ரூ1.40கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.
போலீஸ் காவல் மரணம் போன்ற கொடிய நோய் மேலும் பரவக்கூடாது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பது மட்டும் போதுமானதல்ல. கடும் தண்டனை விதித்தால் மட்டுமே இதனை கட்டுபடுத்த முடியும் என்பதால் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்ததாக அவர் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளார். விசாரணைக் கைதிகள் உள்ளிட்டவர்களை காவலர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
இருப்பினும் காவல்துறையினர் இந்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவது இல்லை. இதனால் இதுபோன்ற காவல் மரணங்கள் ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது. வேலியே பயிரை மேய்வதுபோல பொதுமக்களின் உயிருக்கு காவலாக இருக்க வேண்டியவர்களே அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டு எமனாக மாறுவதால் காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையினை மக்கள் இழக்க நேரிடுகின்றது.
சித்ரவதைக்கு எதிரான சட்டங்கள் இல்லாத நிலையில் அரிதினும் அரிதான வழக்காக இதனை வகைப்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஜனநாயக மாண்புகளையும், சட்டத்தையும் நம்பும் அனைவருக்கும் நீதியினை நிலைநாட்டி வழங்கிய இத்தீர்ப்பினை உள்ளபடியே வரவேற்கின்றோம். மனசாட்சிக்கு உட்பட்டு சாட்சியம் அளித்த தலைமைக்காவலர் ரேவதி மற்றும் இந்நீதியினை வென்றெடுக்க உதவியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
இயற்கை மரணம் என அதிகார வர்க்கத்தினர் மூடிமறைக்க முயன்றபோதும் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்து உள்ளது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மேலும் இதில் தொடர்பு உடைய காவலர்களுக்கு உடந்தையாக உதவிய அரசு மருத்துவர், கோவில்பட்டி சிறை வார்டன், சாத்தான்குளம் டி.எஸ்.பி உள்ளிட்டவர்கள் விடுபட்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது. எனவே குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கி சட்டம் அனைவருக்கும் சமம் என்று நிரூபித்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply