சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆற்றுமணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கட்டுமானத்திற்கு தேவையான கல், எம்.சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தினமும் ஆயிரகணக்கான வாகனங்கள் மூலம் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்கள் வழியாக கொண்டுசெல்லப்படுகின்றன. நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இத்தகைய கனிமவளக் கொள்ளையால் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ள நிலையில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டு உள்ளதோடு வனப்பகுதிகள் அழிந்து நீர் ஆதாரங்கள் தடைபடுவதோடு, மழைப்பொழிவு பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் சரிவு, விவசாயம் பாதிப்பு என எண்ணற்ற பாதிப்புகள் தொடர்வதோடு வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிவதால் பல்லுயிர் பெருக்கம் சீர்குலைவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.
இது ஒருபுறமிருக்க தினமும் குமரி மாவட்ட சாலைகளில் ஊர்வலம் செல்லும் கனரக வாகனங்கள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றன. இவற்றால் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு விபத்துக்களால் சாலைகளில் பயணிப்போர் பெரும் பீதியுடன் செல்லும் சூழலே உள்ளது. இத்தகைய கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும் அதனை மீறி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் அதிவேகமாக இயக்குவதால் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உள்ளது. அதிக எடை காரணமாகவும் விபத்துகள் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் 2021ல் நடைபெற்ற 1225 வாகன விபத்துக்களில் 321 பேர் உயிர் இழந்து உள்ளனர். 2022ல் நடைபெற்ற 1381 விபத்துக்களில் 306 பேரும் 2023ல் நடைபெற்ற 1471 விபத்துக்களில் 350 பேரும் உயிர் இழந்து உள்ளனர். இதில் அதிக விபத்துக்கள் கனிமவள வாகனங்களால் ஏற்பட்டவை ஆகும். கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் ஜூன் வரை நடந்த 674 விபத்துக்களில் 131 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தக்கலையில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது டாரஸ் லாரி மோதியதில் நர்சிங் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தந்தை படுகாயம் அடைந்து உள்ளார்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் இப்பிரச்னை தொடர்பாக Zero Accident Kumari என்னும் திட்டத்தின் மூலமாக விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது அபராதம், வாகனம் பறிமுதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் தடைசெய்யப்பட்ட நேரத்தில் இயக்குவது, சட்டவிரோதமாக கடத்தபடுவது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி செல்வது, போலியான ஆவணங்களை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் கனிமவள வாகனங்கள் அத்துமீறுவது தொடர்வதுடன் இவற்றால் மக்கள் உயிருக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது. எனவே சிலரது பணப் பசிக்காக குமரி மாவட்ட மக்களின் உயிரை இரை ஆக்குவதை இனியும் தொடராமல் தடுத்திட வேண்டியது அவசியம்….அவசரம்..!
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply