சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

வில்லுக்குறி அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்கிணறு மாயம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

ஆக்கிரமிப்பால் மறைந்து போன வில்லுக்குறி அருகேயுள்ள பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறு

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ளது நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சு புளிமூட்டு கிராமம். நூற்றுகணக்கான குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதியில் கடந்த 1948 ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் மட்டுமில்லாது சுற்றுவட்டாரப்பகுதி மக்களும் குடிநீர் தேவைக்கு இக்கிணற்றை பயன்படுத்தி வந்தனர். மேலும் இங்குள்ள நாவியன் தட்டு விவசாய விளைநிலங்களுக்கும் இக்கிணறே பாசனநீர் ஆதாரமாக இருந்து வந்து உள்ளது.

ஆளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக அப்போது இருந்து வந்துள்ள சூழலில் மக்கள் தேவைக்கு குடிநீர் கிணறு அமைப்பதற்கு என ஒரு நபர் 2 சென்ட் நிலத்தை தானமாக அளித்ததாக கூறப்படுகிறது. கிராமத்தின் ஜீவாதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் காணப்பட்ட இக்கிணற்றில் கோடைகாலங்களிலும் நீர் வற்றுவது இல்லையாம். இதனால் தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்படவில்லை.

கால ஓட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வந்த நிலையில் கிணறுகள் காட்சிப் பொருளாகிப் போனது. இதனால் இக்கிணற்றின் தேவை குறைந்து போனாலும் தங்களின் தாகம் தீர்த்த நீர்நிலையினை தாய் உள்ளத்தோடு இக்கிராம மக்கள் நேசித்து வந்தனர். ஆனால் தற்போது இவர்கள் விழாவில் தொலைந்த குழந்தையினை தேடுவது போல காணாமல் போன இக்கிணற்றைத் தேடி வருகின்றனர்.

குறிப்பிட்ட கிணறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுமையாக தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிணறு இருந்ததற்கான தடயங்களே தெரியாதவாறு இப்பகுதியினை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி கபளீகரம் செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. இதில் புதைந்தது கிணறு மட்டுமல்ல இக்கிராம மக்களுக்கு கடந்தகாலங்களில் ஆதரவாக இருந்த தண்ணீர் தேவதையும்..என்பதால் அதன் விமோசனத்திற்காக இக்கிராம மக்கள் தவமாய் தவமிருக்கின்றனர்.

இருந்தும் இவர்களது கோரிக்கை கண்டுகொள்ளப் படாததால் கூண்டுக் கிளியாய் சிறைபட்டு கிடக்கிறது இக்கிராம கிணறு..இதனை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதோடு கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா,

அமைப்பு செயலாளர் புதுக்கடை.பாண்டியன், துணைத் தலைவர் பேரா. C.மோகன்,துணை செயலாளர் R.சாராபாய், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் E.சுரேஷ், தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி, வடக்கு பேயன் குழி கிளை நிர்வாகிகள் D அந்தோணி அருள், R யூஜின், A ராமசந்திரன், A.கோபாலகிருஷ்ணன், டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் இதன் பேரில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

குடிநீர் கிணறு காணாமல் போனது எப்படி?
கிராம மக்களின் ஜீவாதாரம் புதைக்கப்பட்டதா?
நீர்வள பாதுகாப்பில் அலட்சியம்: வில்லுக்குறி மக்கள் வேதனை
ஆக்கிரமிப்பில் சிக்கிய பொதுக்கிணறு மீட்கப்படுமா?
கிணற்றை தேடும் கிராம மக்கள்: குமரியில் அதிர்ச்சி சம்பவம்
வில்லுக்குறியில் மாயமான பொதுக்கிணறு: ஆக்கிரமிப்பின் பின்னணி என்ன?
1948 முதல் மக்களுக்கு சேவை செய்த கிணறு இன்று எங்கே?
கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் ஆக்கிரமிக்கப்பட்டதா?
வில்லுக்குறி பொதுக்கிணறு மீட்புக்கு சமூக பொதுநல இயக்கம் கோரிக்கை
நீர்நிலையை விழுங்கிய ஆக்கிரமிப்பு: குமரியில் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *