சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த கஞ்சா மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்

திருத்தணி ரயில்நிலையம் அருகே கடந்த மாதம் வடமாநில வாலிபரை போதை கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் இன்னும் நம் நினைவை விட்டு அகல்வதற்குள் கஞ்சா போதைக்கும்பல்களால் ஆங்காங்கே நடத்தப்படும் தாக்குதல்கள் நம்மை அச்சுறுத்துபவையாக உள்ளன. தமிழ்நாட்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனை தங்குதடையின்றி நடைபெற்று வருவதால் அதனால் பல்வேறு குற்ற சம்பவங்களும், வன்முறை வெறியாட்டங்களும் பெருகி வருகின்றன. மாநகரம் முதல் கிராமம் வரையில் பஞ்சமின்றி தஞ்சம் அடைந்த கஞ்சாவினால் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஒடிசா, ஆந்திரா தெலுங்கானா, மணிப்பூர், அஸ்ஸாம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வரும் நிலையில் இங்குள்ள அதன் பெருகி உள்ள தேவையினால் கிலோ ரூ 2000க்கு வாங்கப்படுபவை தமிழகத்தில் ரூ 50,000 வரையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இவை கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லேட், கஞ்சா பிஸ்கெட் என பல்வேறு வடிவங்களில் அவதாரம் எடுத்து நமது மக்களிடம் புழங்குகின்றன.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அறவே இல்லை என கூறுகிறார். இதன்மூலம் கஞ்சா தொடர்பான போதை பிரச்னைகளை மூடிமறைக்கப் பார்க்கிறார். ஆனால் அரங்கேறி வரும் பல்வேறு சம்பவங்கள் மூலம் இப்பிரச்னை அம்பலமாகி உள்ளது.மதுபானங்களை அரசே விற்பனை செய்வதின் மூலம் சமூகம் சீர்குலைந்த நிலையில் தற்போது பெருகி வரும் கஞ்சா விற்பனையால் சட்ட ஒழுங்கு சீர்குலைவதோடு, பாலியல் குற்றங்கள், கொலை,கொள்ளை சம்பவங்கள் மேலும் பெருகுவதோடு குடும்ப சூழலுக்கும், சமூக அமைதிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

10 முதல் 17 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளில் 34% பேர் ஏதோ ஒரு போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். கூல்-லிப் போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்துவோரில் 60% பேர் மாணவிகள் என்பதும் ஆய்வில் வெளிவந்து உள்ள அதிர்ச்சிகரமான தகவல். எனவே நமது பிள்ளைகள் நமது பிடியில் இல்லை. போதையின் பிடியில் தான் இருக்கின்றனர். இச்சூழலில் இதனை எளிதாக கடந்து சென்றோம் என்றால் நமது தலைமுறையினர் போதையின் பிடியில் இருந்து கடந்து வர முடியாத நிலைக்கு தள்ளிய குற்றத்திற்கு நாமும் உள்ளாவோம்.

ஆண்டுக்கு ஒருமுறை போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பதால் மட்டும் இத்தீங்கில் இருந்து எதிர்கால தலைமுறையை காத்திட இயலாது. சிறுவர்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கஞ்சா பிடியில் சிக்கியவர்களை மீட்க சிகிச்சை மையங்கள் உருவாக்குவது, போதை பழக்கமும் ஒரு நோயாக கருதி அதற்கு அடிமையானவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வது உள்ளிட்டவை மேற்கொள்தல் வேண்டும். இவ்விஷயத்தில் காலந்தாழ்த்தாமல் போதை சூழலை புதைகுழிக்குள் தள்ளிட உரிய நடவடிக்கைகள் எடுப்பது தேவையாக உள்ளது. எதிர்காலத்தை உருவாக்கும் தலைமுறைகளின் எதிர்காலம் ஆட்சியாளர்கள் கைகளில் தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம்: மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில்?
போதைப்பொருள் பரவல் அதிகரிப்பு: இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
கஞ்சா விற்பனை கட்டுக்குள் வராதது ஏன்?
மாணவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து காப்பது எப்படி?
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கஞ்சா கலாச்சாரம் குறித்து கவலை
போதைப்பொருள் ஒழிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமா?
கஞ்சா மற்றும் இளைஞர்கள்: சமூகத்தின் புதிய சவால்
எதிர்கால தலைமுறையை காக்க போதை ஒழிப்பு அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *