சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பாழடைந்த பழமையான திருவண்ணாமலை நந்தன் கால்வாய் சீரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

பாழடைந்த நந்தன் கால்வாய் மற்றும் அதன் சீரமைப்பு தேவையை காட்டும் படம்

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் அடிப்படையாக திகழ்வது நந்தன் கால்வாய். இது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர் பகுதியில் ஓலையாறு மற்றும் துரிஞ்சலாறு சங்கமிக்கும் இடத்தில் கீரனூர் அணை கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் துரிஞ்சலாற்றின் நீரை திருப்பி விவசாயத்துக்கு பயன்படும் வகையில் இக்கால்வாயினை வெட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.40கி.மீ, விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ என 35.86 கி.மீ தூரம் பயணித்து செஞ்சி அருகே பனமலை ஏரி அருகே இக்கால்வாய் முடிவடைகிறது.300 மீ சுரங்கபாதை, சில இடங்களில் தொட்டிப்பாலம் என நீர்நிலைகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி கட்டப்பட்ட இக்கால்வாய் மூலம் 6500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. திருவண்ணாமலையில் 14, விழுப்புரத்தில் 22 ஏரிகள் இதன்மூலம் நீர்வரத்து பெற்றது. 120 கிராமங்களின் நீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் இது திகழ்ந்தது.

இந்நிலையில் கடந்த 1886 ல் கீரனூர் அணை உடைந்த சூழலில் நந்தன் கால்வாய் நீர்வரத்து நின்றது. இதனால் எவ்வித பராமரிப்பும் இன்றி பாழடைந்து போனதோடு செடிகொடிகள் வளர்ந்து கால்வாய் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்து போனது. அத்தோடு ஆக்கிரமிப்புகள், மணல் தேங்கியதால் நீர்வரத்து முற்றிலுமாய் தடைபட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் பொலிவிழந்து, பயன்பாடற்று காணப்படுவதால் விவசாயிகள் இதனால் பயன்பெற இயலாமல் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் நிலை உள்ளது.

இக்கால்வாயின் முக்கியத்துவம் கருதி கடந்த 1970 ல் தமிழக அரசு ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அவை கடலில் கரைத்த காயம் போலாகிப் போனது. ஆட்சியாளர்கள் பலர் மாறிய போதும் நந்தன் கால்வாய் மட்டும் மாறாமல் அதே நிலையில் உள்ளது. கடந்த தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் வெற்றிபெற்றதும் இக்கால்வாயினை சீரமைப்போம் என்றனர். அவர்கள் வாக்குறுதியை மறந்து போன நிலையில் ஞாபகம் வந்து சீரமைக்க முயற்சிப்பதற்குள் அடுத்த தேர்தல் வர உள்ளது.

நந்தன் கால்வாய் வெறும் நீர்வழிப்பாதை அல்ல. தமிழக விவசாய வரலாற்றின் வாழும் சாட்சி. பல்லவர் கால தொழில்நுட்பம்/ ஆங்கிலேயரின் பொறியியல்/ தமிழக விவசாயிகளின் போராட்டம் இவை அனைத்தும் கலந்த கலவையாகும். இத்தகைய பழந்தமிழரின்மேம்பட்ட நீர் மேலாண்மை திட்டத்தினை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அழிவின் விளிம்பில் உள்ள நந்தன் கால்வாய் உயிர்பெறும் வகையில் திட்டமிட்டு விவசாயிகள் வாழ்க்கைக்கு வெளிச்சம் ஏற்றுவது எப்போது?

நந்தன் கால்வாய், திருவண்ணாமலை நீர்வள பிரச்சனை
விழுப்புரம் கால்வாய் சீரமைப்பு, விவசாய நீர் தட்டுப்பாடு, பழமையான நீர்வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *