சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழக தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர் மோசடி தொடர்பான கல்வி மற்றும் ஆய்வு குறித்த காட்சி

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் AlCTE (All india Council for Technical Education) விதிமுறைகளின்படி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெறவும், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறவும் போதுமான தகுதியான முழுநேர பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இந்த விதியைத் தவிர்க்க பல தனியார் கல்லூரிகள் ஒரே நபரை பல கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர் என போலியாக கணக்கு காட்டி உள்ளனர். 2023-24 கல்வியாண்டில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேரமாக பணியாற்றுவதாக போலியாக காட்டப்பட்டனர்.

ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டப்பட்டது. 295 கல்லூரிகளில் 2000க்கும் மேற்பட்ட போலி பேராசிரியர் பதவிகள் இருப்பதாக தெரியவந்து உள்ளது. சுமார் 211 பேராசிரியர்கள் மூலம் 2500 இடங்களை நிரப்பியதாக கூறப்படுகிறது. கடந்த 2024 ஜூலை மாதம் அறப்போர் இயக்கம் கல்வித் துறையில் நடைபெறும் இத்தகைய மோசடியினை அம்பலபடுத்தியது. அரசியல் பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமானவை என பல கல்லூரிகள் செயல்படும் நிலையில் ஆய்வுக்குழுக்களுடன் சேர்ந்து கல்லூரிகள் நாடகமாடி உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி இம்மோசடியினை உறுதி செய்தது. மேலும் இது தொடர்பாக 295 கல்லூரிகளுக்கு Show Couse Notice அனுப்பியது. சில கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்து உள்ளது. 2025 நவம்பரில் DVAC (Directorate of Vigilance and Anti-Corruption) 10 பல்கலை. அதிகாரிகள், 4 கல்லூரிகள் மற்றும் சில பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளது. இம்மோசடி தொடராமல் தடுத்திடும் வகையில் 2026-27 கல்வி ஆண்டில் பேராசிரியர்களுக்கு 10 இலக்கு அடையாள எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பல தனியார் கல்லூரிகள் லாபத்திற்காக தரத்தை தியாகம் செய்கின்றன. பணவேட்டையில் மாணவர்களை பலிகடா ஆக்குகின்றன. இதனால் தரமற்ற கல்வி, வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்டவற்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் கல்லூரியினை தேர்வு செய்யும் போது கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். கல்விப் பிரிவை தேர்வு செய்வதோடு தங்கள் கடமை முடிந்தது என கருதாமல் தேர்வு செய்த கல்லூரியின் உள்கட்டமைப்பு, NIRF ரேங்கிங், AlCTE அங்கீகாரம் ஆகியவற்றையும் உறுதி செய்வது அவசியமானதாகும்.

போலிப் பேராசிரியர்களால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இத்தவறுகள் மேலும் தொடராமல் தடுத்திடும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் தவறு புரிபவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க இடமளிக்க கூடாது. நடைபெற்று வரும் DVAC உள்ளிட்ட விசாரணைகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். கல்வி வணிகமயமாகி வரும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களுடன் அரசு பொறியியல் கல்லூரிகளை அதிகப்படுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் கல்வி தொடர்பான செய்திகள்
உயர்கல்வி சீர்திருத்தங்கள்
அண்ணா பல்கலைக்கழக செய்திகள்
மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கல்வி வழிகாட்டிகள்
கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மை
போலிப் பேராசிரியர் மோசடி
பொறியியல் கல்லூரி மோசடி
அண்ணா பல்கலைக்கழகம்
AICTE விதிமுறைகள்
தனியார் பொறியியல் கல்லூரிகள்
கல்வி தரம்
DVAC விசாரணை
பொறியியல் கல்வி தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *