சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தற்போதைய மலேசியா, இந்தோனேஷியா பகுதிகளை உள்ளடக்கிய பகுதி கடாரம் என அழைக்கப்பட்டது. இது ஸ்ரீவிஜய பேரரசு என்ற பெயரில் ஆளப்பட்டது. அந்நாட்டின் மன்னரான சைலேந்திர வம்சத்தை சேர்ந்த மாற விஜயோத்துங்க வர்மன் என்பவர் தன் தந்தை சூடாமணிவர்மனின் நினைவாக சோழர்களின் துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் ஓர் புத்தவிகாரம் கட்ட அப்போதைய சோழ மன்னர் ராஜராஜனிடம் அனுமதி கேட்டு உள்ளார். அதனை ஏற்ற ராஜராஜன் ஆனைமங்கலம் என்ற கிராமத்தை தானமாக வழங்கி உள்ளார். அப்பகுதியில் (சுமார் 97 வேலி நிலம் 8943 கலம் நெல் வருமானம்) உள்ள நிலம் இறையிலி (வரி நீக்கி) தானமாக அளிக்கப்பட்டது.அடுத்தடுத்து நடந்த போர்களால் அதற்கான ஆவணம் வழங்கப்படாமல் இருந்தது.
அவரின் மறைவிற்குப் பின் அவரது மகன் ராஜேந்திர சோழன் (1012-1044) தன் தந்தையின் ஆணையினை நிறைவேற்றிடும் வகையில் தானம் வழங்கப்பட்ட தகவலை 30 கிலோ எடை கொண்ட 21 செப்பேடுகளில் பொறித்து சோழப்பேரரசின் ராஜமுத்திரைகளான புலி, இரு மீன்கள், வில், குடை, சாமரம் உள்ளிட்டவற்றை பொறித்து ஒரு வளையத்தில் சேர்த்து பவுத்த மன்னரிடம் ஒப்படைத்தார். சைவ சமயத்தை பின்பற்றிய சோழ மன்னர்கள் புத்தவிகாரம் கட்ட நிலக்கொடை அளித்தது மதநல்லிணக்க அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சோழர்களின் கடல்வணிகம், ராணுவ வலிமை தென்கிழக்கு ஆசியாவுடன் உறவுக்கு சான்றாக திகழ்கிறது.
இந்த செப்பேடுகளை 18ம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தை ஆட்சி செய்த டச்சு காரர்கள் 1712ல் தன் நாடான ஐரோப்பாவிற்கு எடுத்து சென்றனர். இவர்களது தலைமுறையினர் அங்குள்ள லைடன் பல்கலைக்கு அதனை அளித்த நிலையில் லெய்டன் செப்பேடுகள் என்ற பெயரில் அங்கு 300 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருந்தன. இச்செப்பேட்டில் 5 தகடுகளில் இருபுறமும் கிரந்த எழுத்து வடிவில் சமஸ்கிருத மொழியிலும் அடுத்துள்ள 16 தகடுகளில் 232 வரிகளில் தமிழிலும் எழுதப்பட்டு உள்ளது. வரலாற்று ஆவணமான இச்செப்பேடுகளை நெதர்லாந்து நாட்டு பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 16.5.26 அன்று நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் வழங்கினார். தொல்லியல் துறை மூலம் தமிழகத்தில் இச்செப்பேடு பராமரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இச்செப்பேடுடன் தொடர்பு உடைய ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மஹாகாளேஸ்வரர் சிவாலயம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் அழிந்து வருகிறது. இரு கருவறைகள், நந்தி மண்டபத்தின் காட்சி அளிக்கும் இத்தலத்தின் உச்சி கட்டிடம் இடிந்து அவற்றின் கற்கள் சிதைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இப்பகுதி கண்டுகொள்ளப்படாமல் சுவர்கள், விமானம், கருவறை இடிபாடுகளுடன் முட்புதர்கள் சூழ்ந்த நிலையில் உள்ளது.
ஆனைமங்கலம் செப்பேடுகள் காலங்கள் தொலைத்த போதும், கடல் கடந்து திரும்பி வந்து உள்ளது மகிழ்ச்சி தருவதாக இருப்பினும் அதனோடு தொடர்பு உடைய வரலாற்று சின்னங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால் வருத்தம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. எனவே பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ள குறிப்பிட்ட பழமைவாய்ந்த வழிபாட்டு தலங்களை புனரமைத்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். சோழர் கால வரலாற்றை வெளிப்படுத்தும் சாட்சியாக உள்ள அழியும் பொக்கிஷங்கள் காக்கப்பட வேண்டும். கடந்த கால வரலாறு மீட்போம் வரும் தலைமுறை மூலம் அதனை காப்போம்…
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply