சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கேரளம் மாநிலம் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை நடைபெற்று வரும் நிலையில் மேப்பாடி அடுத்த கல்லாடிப் பகுதியில் 7.7.26 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணில் புதைந்து 5 தொழிலாளர்கள் பலியான நிலையில் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சுரங்கப் பணியின் போது தோண்டப்பட்ட மண் குவியலை அருகிலேயே வைத்திருந்ததால் மழையில் அது நிலைத்தன்மை இழந்து சரிந்ததால் இவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30.7.2024 ல் வயநாட்டில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வயநாடு இவ்வாறு தொடர் பாதிப்புகளுக்கு உள்ளாவதற்கு மனித தலையீடுகளே முக்கிய காரணமாய் உள்ளது. 1950 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 62% வனப்பகுதி அழிக்கப்பட்டதால் இப்பகுதி பிடிப்பு தன்மை இல்லாமல் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியாக மாறிப்போனது. சாலைகள், சுரங்கங்கள், ரிசார்ட்டுகள், குடியிருப்புகள், செங்குத்தான சரிவுகளில் அறிவியல்பூர்வமற்ற கட்டுமானங்கள், தேயிலை, ஏலக்காய் தோட்டங்களின் பெருக்கம் என பல்வேறு காரணங்களால் இப்பகுதி மரணப் பள்ளதாக்குகளாக காட்சி அளிக்கின்றன. மனித நடவடிக்கைகள் காரணமாகவே இங்கு பேரழிவுகள் தொடர்கின்றன.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளும் இதனை போன்ற புவியியல் தன்மை கொண்டவை. நீலகிரியில் 2009/ 2019/2020 என பலமுறை நிலச்சரிவுகள் நிகழ்ந்து உள்ளன. குவாரி சுரங்கங்கள், காடழிப்பு,சுற்றுலா விரிவாக்கம், சாலை விரிவாக்கம், ரிசார்ட்டுகள்,கட்டுமானங்கள் என கட்டுப்பாடற்ற திட்டங்களால் இப்பகுதிகளிலும் பேரழிவுகள் உருவாகும் சூழலை எதிர்நோக்கி உள்ளோம். வயநாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நமக்கு படிப்பினைகள் தந்தபோதிலும் அதன் மூலம் பாடம் கற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய 6 மாநிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் மூலம் பயன்பெற்று வரும் நிலையில் இம்மாநிலங்கள் இதனை பாதுகாக்க தவறினால் பல்லுயிர் பெருக்கம், நீர்வளம், விவசாயம், காலநிலை சமநிலை அடியோடு பாதிப்பு அடையும். எனவே தான் 1,29,037 சதுர கி.மீ கொண்ட இப்பரப்பளவை தென்னிந்தியாவின் நுரையீரல் என்கிறோம். இதை பாதுகாக்கத் தவறினால் சுற்றுசூழல் பாதிப்புகள், காலநிலை மாற்றங்கள் மட்டுமில்லாது வயநாடு போன்ற பாதிப்புகள் தொடர்வதும் தடுக்க இயலாததாகிப் போகும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2010ல் பேரா.மாதவ் காட்கில் தலைமையில் அமைத்த 14 பேர் கொண்ட குழு 31.8.2011 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலையின் முழுப்பகுதியினையும் ESA (Ecologically sensitive Area) ஆக அறிவிக்க பரிந்துரை செய்தது. பெரிய அணைகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்கள் இப்பகுதியில் செயல்படுத்திட தடை விதித்தது. குறிப்பிட்ட அறிக்கை கடுமையாக உள்ளதாக சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில் 2012ல் Dr.கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 15.4.2013 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. இதன்படி 37% பகுதி (சுமார் 60,000 சதுரகி.மீ) ESA என அறிவிக்க பரிந்துரை செய்தது.
காட்கில் அறிக்கையினை விட கஸ்தூரிரங்கன் அறிக்கை மிதமான வகையில் சில பரிந்துரைகள் அளித்து உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி பகுதிகளில் 6914 சதுரகி.மீ பரப்பளவு ESA வாக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இப்பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு பல வரைவு அறிவிப்புகள் வெளியிட்டது. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமலாக்கம் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. சுற்றுசூழல், பல்லுயிர், காலநிலை, நீர் ஆதாரம் உள்ளிட்டவை பாதிப்புகள் அடைவதை தவிர்க்க காட்கில் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை காப்பது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply