சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள 5432.72 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை அகத்தியமலை உயிர் மண்டலக் காப்பகமாக மத்திய அரசு 2001 ல் அறிவித்தது. இப்பகுதியில் 2254 வகையான தாவரங்கள் உள்ளது. அதிலும் 405 இனங்களை இங்கு மட்டுமே பார்க்க இயலும். 79 வகையான பாலூட்டிகள், 88 வகையான ஊர்வன, 45 வகை நீர்நில வாழ் உயிரினங்கள், 46 வகையான மீன் இனங்கள், 337 வகை பறவை இனங்களின் வாழ்விடமாக இப்பகுதி திகழ்கிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியறை முதல் கேரளாவின் கொல்லம் மாவட்டம் எடமன் வரையில் நான்குவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அகத்தியமலை உயிர் மண்டல காப்பகப் பகுதியில் 10கி.மீ தூரத்திற்கு மலைகளை குடைந்து சுரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.10.179கி.மீ நீளத்திற்கும், 10.103 கி.மீ நீளத்திற்கும் என இரு சுரங்க வழிப்பாதை 11மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் திட்டத்தினை செயல்படுத்திட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் வனத்துறையிடம் அனுமதி கேட்டு உள்ளது. 10கி.மீ தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் போது கடினமான மலைகள் தகர்க்க வேண்டும். இதனால் ஏற்படும் நிலஅதிர்வின் தாக்கம், நீரியல் பாதிப்புகள், உயிர் பன்மையத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்பு, நிலச்சரிவு அபாயம், புவியியல் நிலைத்தன்மை உள்ளிட்ட எவ்வித ஆய்வுகளும் இடம்பெறாமல் குறிப்பிட்ட விண்ணப்பம் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு அளிக்கப்பட்டு உள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமானால் இயற்கை சுற்றுச்சூழலும், உயிர் பன்மையமும், கடும் பாதிப்பிற்கு உள்ளாகும். இப்பகுதியில் வசிக்கும் புலிகள் மற்றும் யானைகளின் வலசைப் பாதை துண்டிக்கப்படுவதால் அவற்றின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும். இத்திட்டத்திற்கு என 23,500 மரங்கள் வெட்டப்படும் என தெரிவிக்கப்படுவதால் தாமிரபரணி உள்ளிட்ட பல ஜீவநதிகளின் உற்பத்தி தடைபடும்.
மறைந்த சூழலியல் அறிஞர். மாதவ் காட்கில் தலைமையிலான நிபுணர்குழு தயாரித்த மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் வல்லுநர் குழு அறிக்கையும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 2014ல் வெளியிட்ட Connecting Tiger Populations for Long Term Conservation என்னும் அறிக்கையும் குறிப்பிட்ட இடத்தின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகிறது. இருந்தும் இவற்றை கண்டுகொள்ளாமல் இத்தகைய இயற்கை சீரழிவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் நிலச்சரிவு உள்ளிட்ட பேராபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே சுற்றுச்சூழல் காக்கப்பட குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply