சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

ஆகாயத்தாமரை செடிகளால் மூடப்பட்ட பழையாறு நீர்நிலை

குமரி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையில் வடமேற்குத் திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ தூரம் பயணித்து மணக்குடி பகுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதோடு இந்த ஆற்றில் சோழர், பாண்டிய, சேர மன்னர்கள் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்ட 13 தடுப்பணைகள் மூலம் 97 குளங்கள் வழியாக 15 ஆயிரத்து 821 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் பழையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் முழுமையாக ஆக்கிரமித்து காட்சி அளிக்கின்றன. இதனால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த ஆறு மாறி வருகிறது.

ஆகாயத்தாமரைச் செடிகள் அடர்த்தியாக படர்ந்து நீர் ஓட்டத்தை முழுமையாக தடுக்கிறது. இதனால் பாசனம் பாதிக்கப்படுவதோடு வெள்ளம் தடைபட்டு பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதன் இலைகள் நீர்பரப்பை மூடிவிடுவதால் சூரிய ஒளி உள்ளே புகாத நிலை ஏற்படுகிறது. இதனால் பைட்டோ பிளாங்க்டன் எனப்படும் சிறு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய இயல்வதில்லை. ஆகாயத்தாமரை செடிகள் அழுகும் போது பாக்டீரியாக்கள் ஆக்சிஜனை அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் நீரின் ஆக்சிஜன் அளவு அடியோடு பாதிக்கப்படுவதோடு நீர் மாசுபாடு அடைந்து சுகாதார சீர்கேடு ஏறபடுகிறது.

நீரில் ஆக்சிஜன் அளவு குறைவதால் இதில் வாழும் மீன்கள், நண்டு, நத்தை, தவளை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் மடிந்து போகின்றன. குறிப்பாக நீரின் DO அளவு 2-3 mg/L க்கு கீழ் சென்றால் Mass fish Kill எனற நிலையில் மீன்கள் இறப்பினை சந்திப்பதை தவிர்க்க இயலாது. இதனால் உணவு சங்கிலி முறிந்து பறவைகள், ஊர்வன போன்றவையும் பாதிக்கப்படுகிறது. ஆக்சிஜன் குறைபாட்டால் அனைரோபிக் பாக்டீரியாக்கள் உருவாகி ஹைட்ஜன் சல்பைடு, மீதேன், அம்மோனியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் உருவாகும் கேந்திரமாக மாறுவதுடன் டெங்கு, மலேரியா உருவாக்கும் கொசுக்களின் தாயகமாகவும் அமைகிறது.

நாகர்கோவில் மாநகர கழிவுநீர் இந்த பழையாற்றில் சங்கமித்து வருவதால் ஆகாயத் தாமரைச் செடிகள் அதன் நைட்ரஜன், பாஸ்பரஸ் சத்தால் மிக வேகமாக அதிகமாக வளர்கின்றன. ஒரு செடி ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் நீரை ஆவியாக வெளியேற்றுகிறது. இதனால் இதன் அதிவேக ஆவியாக்கும் திறனால் நீர் பற்றாக்குறை ஏற்படவும் காரணம் ஆகிறது. நீர்நிலையின் சுற்றுச்சூழல் சமநிலை முற்றிலும் பாதிக்கப் படுவதற்கும், நீர் மாசுபாட்டிற்கும் காரணமான ஆகாயத்தாமரைகள் முற்றிலும் அழிக்கப்பட்டால் மட்டுமே இதன் பாதிப்பில் இருந்து தப்பலாம். நீர், நிலம் இரண்டிலும் இயக்கப்படும் Amphibious Harvesters எனப்படும் எந்திரங்கள் ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆகாய தாமரைகளை அகற்ற பயன்படுத்துகின்றனர்.

மேலும் High-Capacity Harvestors எனப்படும் எந்திரங்கள் நாக்பூர் அம்பாசாரி ஏரியில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரே இயக்கத்தில் 5 டன் வரை செடிகளை அகற்ற முடியும். ICRISAT எனப்படும் சோலார் பவர் ஹார்வெஸ்டர் எந்திரங்கள் மூலமும் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேலும் உயிரியல் ரீதியாக Neochetina Weevils எனப்படும் பூச்சி இனங்களை விடுவதின் மூலமாகவும் இதன் அடர்த்தியை குறைக்கலாம். அழிவை தரும் ஆகாயத்தாமரை மூலம் காகிதம், பயோகேஸ், பைபர் பொருட்கள்,உரம் தயாரிக்க முடியும் என்பதால் இதனை மாற்று சக்தியாக மாற்றவும் முயற்சிக்கலாம். எனவே ஆகாயத்தாமரை செடிகளால் பாழான பழையாற்றை மீட்க துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை.பாண்டியன், துணை தலைவர் பேரா. C.மோகன், துணை செயலாளர் R.சாராபாய், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் CV.முருகன், விவசாய அணிச் செயலாளர் L. வேதக் கண், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் D. தேவதாஸ், தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆகாயத்தாமரையால் மூடப்படும் பழையாறு: உடனடி நடவடிக்கை தேவை
பழையாற்றின் உயிரியல் சமநிலையை சீர்குலைக்கும் ஆகாயத்தாமரை
குமரியின் பழையாறு ஆபத்தில்: ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
நீரோட்டத்தை தடை செய்யும் ஆகாயத்தாமரை செடிகள்
பழையாற்றை மீட்க சமூக பொதுநல இயக்கம் கோரிக்கை
ஆகாயத்தாமரை காரணமாக மீன்வளம் மற்றும் பாசனம் பாதிப்பு
பழையாற்றில் நீர் மாசுபாடு அதிகரிப்பதற்கு காரணம் என்ன?
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறும் ஆகாயத்தாமரை
பழையாற்றின் எதிர்காலம் கேள்விக்குறியா?
நீர்நிலைகளை காப்போம்: பழையாற்றில் அவசர சீரமைப்பு தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *