சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

வெறுப்பு பேச்சை வேரறுக்க வெறுப்புக் குற்றதடுப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்களை தடுக்க சட்டம் கோரும் சமூக அமைப்புகள்

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையினை ஒட்டி மதவாத கும்பல்களால் தீவிரதாக்குதல்கள் நடந்து உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது போலவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரகாண்டின் டேராடூனில் திரிபுராவைச் சேர்ந்த ஏஞ்சல் சக்மா என்ற கல்லூரி மாணவர் வன்முறை கும்பலால் தாக்கி கொலை செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு நாட்டில் இனம், மதம், சாதி, பால், மொழி உள்ளிட்டவை மீது வெறுப்பை தூண்டும் வகையில் செய்யப்படும் பிரசாரங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தினை ஏற்படுத்துவதாய் உள்ளன.

திருத்தணியில் வடமாநில இளைஞர் சுராஜ் என்பவர் 17 வயதுடைய சிறார்களால் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தார். இத்தாக்குதல்களுக்கு கஞ்சா போதை காரணம் என கூறப்பட்டாலும் இதில் அடிப்படையாய் உள்ளது வெறுப்பின் தாக்கம் என்பதை சொல்லித் தெரிய வேண்டும் என்பது இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் வெறுப்பு பேச்சுக்கள் 74% அதிகரித்து உள்ளதாக கூறி உள்ளதைப் போலவே தற்போது தொடர்ச்சியாக அரங்கேறும் நிகழ்வுகள் வெறுப்பின் உச்சத்தில் நடைபெறும் சம்பவங்களின் சாட்சியாகவே காட்சி அளிக்கின்றன.

இந்தியாவில் நாளுக்கு நாள் வெறுப்பை தூண்டும் வகையில் பேச்சுக்கள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களே வெறுப்பினை தூண்டி பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அரசியல் சுயலாபத்திற்காக மதங்களை சிறுமைபடுத்துவது, தாக்குதல்களை ஏற்படுத்துவது மனிதகுலத்தினை காட்டுமிராண்டி காலத்திற்கே கொண்டு செல்வதாகவே உள்ளது.

உச்சநீதிமன்றம் பல முறை இத்தகைய வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளதோடு இதன் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளது. இருந்தும் இவ்விஷயத்தில் ஆட்சியாளர்கள் கள்ள மௌனம் காப்பது தீங்கினையே உருவாக்கும். தனிநபர் உரிமை மற்றும் அவர்களது கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய பிரசாரத்தை பேச்சு சுதந்திரம் என்று பாராமுகமாய் இருப்பது இந்திய இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் புதைகுழி வெட்டுவதைப் போன்றதாகும்.

ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எவராக இருப்பினும் தங்கள் பேச்சில் வெறுப்பை விதைக்காமல் தங்கள் பொறுப்பினை உணர்ந்து பேச வேண்டும். நாடு அல்லது சமூகம் என்பது வெறுமனே நிலபரப்பை மட்டும் உள்ளடக்கியது அல்ல. மாறாக பரஸ்பர நட்பையும், சமூக அமைதியையும், சுதந்திரத்தையும் அடிப்படையாய் கொண்டது. அதற்கு ஊறு விளைவிக்கும் வெறுப்பு பிரசாரங்களை வேரறுப்பதே தற்போதைய தேவையாக உள்ளது. எனவே இன, மத, மொழி வெறி தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் வெறுப்புக்குற்ற தடுப்பு சட்டத்தினை நிறைவேற்றி தேச மற்றும் மக்கள் நலன் காத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *